என் - எனின், இதுவும் அது. (இ - ள்.) விழைவின் கண்ணதும், காலத்தின் கண்ணதும், ஒழியிசைக்கண்ணதும் என மூன்று கூற்றதாம் என்ப ‘தில்’ என்னும் இடைச்சொல். (எ - டு.) “வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி, யரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந் - 14) இது விழைவு. “பெற்றாங் கறிகதில் லம்மஇவ் வூரே” என்பது காலம். “வருகதில் அம்மவெஞ்சேரி சேர” என்பது ஒழியிசை. (5) |