‘ஏ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
 

259.

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை யிவ்வைத் தேகா ரம்மே.
 

என்  -   எனின்,   இது   பெரும்பான்மை   பொருள்  படுமாறும்
சிறுபான்மை யசைநிலையாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்)  தேற்றப்  பொருண்மை,  வினாப்பொருண்மை, பிரிநிலைப்
பொருண்மை,    எண்ணுப்     பொருண்மை,   ஈற்றசையாதல்    என
இவ்வகைந்து வகைப்படும் ஏகாரம், (எ - று.)

(எ - டு.)  தேற்றம் - அவனே கொண்டான்.

இனி வினா - நீயே கொண்டாய்.
இனிப் பிரிநிலை - அவனே கொண்டான்.
இனி எண் - நிலனே நீரே தீயே வளியே.

இனி ஈற்றசை  -  கடல்  போல்  தோன்றல காடிறந்தோரே. ஈற்றசை
என்றமையான் மொழி முதற்கண் அசையாகாது என்பது.            (9)

******************************************************************