என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள்தான், ஐயுறும் பொருளுந் துணியும்பொருளும் என இரு வகைத்து. அவற்றுள் ஐயுறும் பொருட்கண் உயர்திணைபால் ஐயத்துக்கண் பால்வழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) திணையறிந்து பால் மயங்கலுற்ற ஐயச்சொல், தான் அறிந்த உயர்திணைப் பொருளிடத்துப் பன்மையாகக் கூறுக, (எ - று.) (எ - டு.) ஒருவன் கொல்லோ? ஒருத்தி கொல்லோ? இதோ தோன் றுவார் என்பது. இவ்வையம், கண்டவிடத்து ஐயமும், காணாவிடத்து ஐயமும் என இருவகைத்து, இனிக் காணாதவழி ஒருவனோ பலரோவென்று ஐயுறும் பான்மயக்கமுங் கொள்க. இது தானறியானாவதல்லது அப்பொருள் இருபாலுமாய் நிற்றலில்லை. பிறமற்றொன்றாகிய அப்பொருளைப் பன்மையாற் கூறுதல் வழூஉவன்று; வழூஉவே யெனினும் அமைக எனப் பால்வழூஉ அமைத்தவாறாயிற்று. இவ் வையத்துக்கு இலக்கண வழக்கென வேறு காணாமையின் இது தான் இலக்கணமாகற்பாற்று எனின், வேறு வழக்கில்லை யெனினும், இது பொருள்வகை தொக்கவழூஉ வெனப்படும். ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார் எனப் பொதுவாகக் கூறல் இலக்கண வழக்காம் பிறவெனின், அவ்வாறு கூறுவாரின்மையானும், ஆர் என்பது ஆண்பாற் கல்லது ஏலாமையானும் ஆகாதென மறுக்க. (23) |