என் - எனின் துணிபொருட்கண் மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) தனது தன்மையாகிய அன்மைத்தன்மையைச் சொல்லுதலும் உரித்து என்று சொல்லுப ஆசிரியன்; அன்மைப் பொருள் எவ்விடத்தெனின் ஐயத்திற்கு மறுதலையாகிய துணி பிடத்து, (எ - று.) தன்மை சுட்டல் என்புழி இன்னதன்மை என்பது இன்றேனும், மேல் அன்மைக்கிளவி என்றதனான் அன்மைத் தன்மை என்பது ஓர் ஒப்பிற் கொள்க. கிளவியென்பது பொருள். (எ - டு.) பெண்டாட்டி அல்லன் ஆண்மகன், ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி, குற்றி அல்லன் மகன், மகன் அன்று குற்றி, பல அன்று ஒன்று, ஒன்று அல்ல பல என்பன. பெண்டாட்டியல்லன் ஆண்மகன் என்புழி ஆண்மகன் என்னும் பெயர் எழுவாயாய் அல்லன் என்னும் வினைக்குறிப்பினைப் பண்புகொள் வருதல் என்னும் பயனிலையாக முன்னேகொண்டு நின்றமையின் பெண்டாட்டி என்னும் பெயர்க்கு முடிவு இல்லை யெனின், அதற்கு உருபு தொகையாக்கி நீக்கப்பொருட்கண் பெண்டாட்டியின் அல்லன் என ஐந்தாவதனை விரித்து முடிபுகொள்க. இதனாற் சொல்லியது என்னையெனின், இருபொருள் ஐயுற்றுத் துணியும்வழி, அவ்வையுற்ற பொருட்டன்மை இத்துணி பொருளிடத்து இன்மையும், துணிபொருட்டன்மை அவ்வையப்பொருட்கண் இன்மையுங் காணுமன்றே! கண்டுழி, இஃதன்மை அதற்கும், அஃது அன்மை இதற்கும், அன்மை யாதானும் ஒன்றன்மேல் ஆக்கிக் கொடுப்பினும் அமையும் என்று கருதற்க. இஃது அன்மை யதற்கும் உண்டே யெனினும் துணிந்து வழி உள்பொருளாய் நின்று காணப்பட்டது. அஃது அன்மையாதலின் இதன்மேலிருக்க என மரபிலக்கணங் கூறியவாறாயிற்று. (25) |