வண்ணச்சினைச் சொல்பற்றிய மரபு
 

26.

அடைசினை முதலென முறைமூன்று [மயங்காமை.
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.
 

என் - எனின் வண்ணஞ் சொல்வதோர் மரபு கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) பண்பினை   யுணர்த்துஞ்   சொல்முன்னர்;   பண்பினை
யுடைய      சினைப்பொருளை      யுணர்ந்துஞ்சொல்     அதற்பின்;
அச்சினையையுடைய முதற் பொருளை  யுணர்த்துஞ்சொல்  அதன்  பின்
என்று   கேட்டான்    அடைவுகருதும்படி    அம்மூன்றும்  அம்முறை
மையின்  மயங்காமல்  வழக்குப்பெற்று   நடக்கும்   வண்ணச்  சினைச்
சொல்,
(எ - று.)

(எ - டு.) பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை என வரும்.

பெரும்பலாக்கோடு,  பெருவழுதுணங்காய்   என  மயங்கியும் வருமா
லோவெனின்,    அவ்வாறு    மயங்கிக்      கூறுவன    கண்டன்றே
இவ்விலக்கணம்   எழுந்தது.   இதனால்   அதனை   அழிவழக்கென்று
மறுக்க.  பெருந்தலையானை  யுடையதும்   வெறும்புல்லா   நல்லேறும்?
வேறுபொருள்    கொண்டியைபு    மாவதும்     எனின்;    அவ்வாறு
பொருள்கோடல் செய்யுட் கல்லது இன்றென்று மறுக்க.

முறை     என்றவதனானே   ஒரு    முதற்பொருட்கண்   இரண்டு
பண்படுத்துவருவனவும்   வழக்கினுள்    உள    என்று    அமைத்துக்
கொள்ளப்படும்.

(எ - டு.) இளம்பெருங்   கூத்தன்,  சிறுகருஞ்சாத்தன்  என  வரும்.
‘இள’ என்னுஞ் சொல் பெருமை  யென்பதனோடும்  இன்றாய்க்  கூத்தன்
என்பதனோடு இயைபு கோடல் மரபன்மையின் அமைக்கப்பட்டது.

இன்னும்  இவ்விலேசானே  சினைப்பொருட்கண் இரண்டு பண்படுத்து
வருவனவும், செய்யுளுள் உள என்றும் அமைக்கப்படும்.

(எ - டு.) சிறுபைந்தூவி, செங்காற்பேடை என வரும்.

நடைபெற்று  என்றதனால்  அவ்வடை  சினைமுதல்கள் செய்யுட்கண்
முறை மயங்கியும் வரப்பெறும் என்பது கொள்ளப்படும்.

(எ  -  டு.)  பெருந்தோட்  சிறுநுசுப்பிற் பேரமர்க்கட்  பேதை என
வரும்.

அடை சினை   முதல்   என்று,  பின்பும்  வண்ணச்  சினைச்சொல்
என்றது  என்னையெனின்,   முற்கூறியது   இலக்கண  வாய்பாடாகலான்
அவ்     விலக்கண     முடையது      இதுவென     வேண்டுதலின்,
அவ்விலக்கணத்தான் அவ்விலக்கண முடைய  பொருட்குக்  குறியிட்டார்
என வுணர்க.

இதனாற்  சொல்லியது   என்னையெனின்   அடை   சினை  முதற்
பொருள்களைக்   கூறுங்கால்  இன்னவாறு  கூறுக   என்று   அவற்றது
மரபிலக்கணமும் அவ்வழி மரபு வழுவமைதியும் கூறியவாறாயிற்று.  (26)

******************************************************************