என் - எனின் உயர்திணைப் பால்வழுவமைதியும், அஃறிணைத் திணை வழுவமைதியும் உடன் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) உயர்திணையிடத்து ஆண்பாலினையும், பெண் பாலினையும் அத்திணைப் பன்மைப்பாலாற் சொல்லுஞ் சொல்லும், அஃறிணையொன்றனை உயர்திணைப் பன்மையாற் சொல்லுஞ் சொல்லும் இவையிரண்டும் வழக்கின் கண்ணே யுளவாகி யுயர்த்துச் சொல்லும் பொருண்மைக்கண் வரும் சொல்லாம்; இலக்கணத்திடத்துச் சொல்லும் நெறியல்ல, (எ - று.) (எ - டு.)தாம் வந்தார் என்பது. இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்ற மிகையானே காதன் மிகுதியால் உயர்திணை அஃறிணையாகவும், அஃறிணை உயர்திணையாகவும் கூறுவனவும் அமைத்துக்கொள்க. (எ - டு.) என் பாவை வந்தது; போயிற்று. என் யானை வந்தது; போயிற்று என இவை உயர்திண அஃறிணையாயின. இனி ஓர் ஆவினை எம் அன்னை வந்தாள், போயினாள் எனவும்; ஓர் எருத்தினை எந்தை வந்தான் போயினான் எனவும் கூறுவன அஃறிணை உயர்திணையான் வந்தனவாம். மற்று, இவை ஆகுபெயரன்றோ எனின், ஒப்புள்வழிச் சொல்வது ஆகுபெயர்; இது காதலுள்வழிக் கூறுவது என உணர்க. இதனுள் உயர்திணை அஃறிணையான் வந்தன ‘குடிமையாண்மை’ என்பது சிறப்பென்புழிப்பட்டு அடங்குமாலோவெனின் அவை காதலின்றிச் சிறப்பித்துச் சொல்லுவன என வேற்றுமையுணர்க, ‘வழக்கினாகிய’ என்றதனான் பிறவும் உயர்திணைப் பெயர்களை அஃறிணைமேல் வைத்துச் சொல்லுவனவும் செய்யுட்கண் அமைத்துக் கொள்க. (எ - டு.) கன்னி நறுஞாழல், கன்னி எயில், கதிர் மூக்காரல், கரிவனாகம் என்பன போல்வன. இதனாற் சொல்லியது வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் ஒரோவோர் காரணங்களைப்பற்றிப் பாலினையுந் திணையினையும் மயங்கக் கூறுவன கண்டு அவற்றிக்கு அமைதி கூறியவாறாயிற்று. (27) |