இடம் உணர்த்தும் சொற்கள் பற்றிய மரபு
 

28.

1 செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னும்
அம்மூ விடத்தும் உரிய வென்ப.
 

என்  - எனின்  இடம்பற்றி    நிகழுஞ்   சொற்களுட்  சிலவற்றிற்கு
இலக்கணங்கூறுவான்,  அச்சொற்களது  இடங்களது  பெயரும்  முறையுங்
கூறியமுகத்தான் அவற்றிக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   செலவுப்        பொருண்மைக்கண்ணும்,      வரவுப்
பொருண்மைக்கண்ணும்,  தரவுப்   பொருண்மைக்கண்ணும்,   கொடைப்
பொருண்மைக்கண்ணும்,   நிலைபெற்றுத்   தோன்றுகின்ற செலவு, வரவு,
தரவு,   கொடையென்ற   நான்கு   சொல்லும்,   தன்மை   முன்னிலை
படர்க்கையென்று         சொல்லுப்பட்ட        அம்மூன்றிடத்திற்கும்
பொதுவகையான் உரிய, (எ - று.)

(எ - டு.) சிறப்புவகையாற் கூறும்வழிக் காட்டுதும்.           (28)


1  இது முதல் மூன்று நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர்
தெய்வச்சிலையார்.

******************************************************************