என் - எனின் இதற்கும் விதி யொக்கும் என்றவாறு. (இ - ள்.) ஒழிந்த செல்லும் கொடுக்கும் என்னுஞ் சொல் இரண்டும், ஒழிந்த படர்க்கையிடத்திற்கு உரிய; தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆகா, (எ - று.) (எ - டு.) அவர்க்குச் செல்லுங் காணம், அவர்க்குக் கொடுக்குங் காணம் எனவரும். பொதுச்சூத்திரத்துள் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய தரவினையும் வரவினையும் தரவு வரவு என்று ஓதாது வரவினைச் செலவினோடு இயைபு படுத்தியும், படர்க்கைக்குரிய கொடுக்கும் என்பதனோடு செல்லும் என்பதைக் கூறாது தரவென்பதனை இயையவைத்தும் கூறிய முறையன்றிக்கூற்றினாற் கொடைப்பொருட்கண் கொடுக்கும் என்பதனைக் தரும் என்றும், செல்லும் என்பதனை வரும் என்றும் கூறுவனவற்றை இடவழுவாக்கி யமைத்துக்கொள்ளப்படும் என்பது. வரவு தரவு என்பன தம்முள் இயைபுபட நின்றனவாலெனின் தம் முள் இயைபுடைய எனினும் முன்கூறிய செலவினோடும் வரவுப் பொருளான் இயைபுபடுதலின் இத்தரவினோடு இயைபின்றாயிற்று என உணர்க. ‘புனல்தரு பசுங்காய் தின்று’ (குறுந்-292) அவர்க்கு வரூஉங் காணம் என்றாற்போல்வன கொடைத்தொழிலிடை மயக்கமாகக் கொள்க. இன்னும் வரவினோடு செலவு கூறிய முறையன்றிக் கூற்றால் அக்கொடைத் தொழிலல்லாச் செலவு வரவின்கண்ணும் இடமயக்கங் கூறுவன அமைத்துக்கொள்ளப்படும். (எ - டு.) ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, (அகம்-39) ‘யானெய்த அம்பு நின்மேற் செல்லும்’ அரிமலர்ந் தன்னகண் அம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் செத்து-தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி ஐயத்து நின்ற தரா இந்நிகரனவெல்லாங் கொள்க. இந்நான்கு சொல்லுமே இடமயக்கம், ஆராய்ந்தது என்னை? எல்லாப் பெயர்களும் வினைகளும் இடத்தொடு பட்டால் வருவதெனின் வேற்றுமை யுண்டு. அவ்வாறு தத்தம் இடங்கள்மேல்நின்ற சொற்கள் ஒன்றனோடு ஒன்று சேருமியல்பு கூறுதல் இந்நான்கிற்கும் அல்லது இன்மையின் இவற்றையே கூறினார் என்பது. செலவு முதலிய சொல் நான்கும் படர்க்கையே எனினும், வரும் தரும் என்னும் இரண்டு படர்ககையும் தன்மை முன்னிலைகளோடு இயைபு பட்டும், செல்லும்கொடுக்கும் என்னும் இரண்டும் தமக்கேற்ற படர்க்கையோடு இயைபுபட்டும் நின்றவாறு கண்டுகொள்க. இவற்றாற் சொல்லியது ஓரிடத்துச் சொல் ஓரிடத்துச் சேருமிடத்துப் பிறக்கும் இட இலக்கணமும் இடவழுவமைதியும் என்பது. (30) |