என் - எனின் உலகத்துப் பொருள்தான் அறிந்த பொருளென்றும், அறியாப்பொருளென்றும் இரண்டு வகைத்து. அவற்றுள், அறியாப் பொருண்மேல் நிகழுஞ் சொல்லது இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) யாது எவன் என்று சொல்லப்படும் அவ்விரண்டு சொல்லும் தன்னான் அறியப்படாத பொருளிடத்து வினாச் சொல் லாய் யாப்புறத்தோன்றும், (எ - று.) (எ - டு.) நுந்நாடு யாது? இப்பண்டி யுள்ளது எவன்? என வரும். இவற்றுள் எவன் என்பது இக்காலத்து ‘என்’ என்றும், ‘என்னை’ என்றும் மருவிற்று. செறிய என்றதனாற் பிறவும் அவ்வினாப் பொருளிடத்து வருவன கொள்ளப்படும். (எ - டு.) யாவன், யாவள், யாவர், யார், யாவை, யா, எப்பொருள் என இவை. எவன் என்பது அஃறிணை இருபாற்கும் உரிய இதனானே யெனினும் ஒருமைப் பான்மேல் வருவதே பெரும்பான்மை யென்பது உரையிற் கோடல் என்பதனாற் கொள்ளப்படும். (31) |