என் - எனின், மேல் அறியாப் பொருண்மேல் நிகழும் என்ற மரபிலக்கணம் கூறிய சொற்களுள் ஒன்றற்குச் சிறிதறிந்தவழியும் வருமரபும் உண்டென்று அறிந்து அது காத்தல் நுதலிற்று. (இ - ள்.) மேல்வினாவப்பட்ட இரண்டனுள்ளும், யாது என்று சொல்ல வருகின்ற வினாப்பொருளை உணரநின்ற சொல், அறிந்த பொருளிடத்துண்டாகிய ஐயந்தீர்தற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து, (எ - று.) (எ - டு.) ஒருவன் ஐந்து எருதுடையான், காப்பக் கொடுப்பவற்றுள் ஒன்று கெட்டதென்று காப்பானிடைச் சொல்லினவிடத்து எருதுடை யான் வெள்ளை, காரி என்னும் ஐயம் தீர்தற்பொருட்டு அவற்றுள் யாதென்று வினாதல் என்பது. மற்சூத்திரத்துப் பின்தொடர்புடையது என்பதனைப்பின்வைக்கற்பாற்று என்பதனான் இன்தோடு இயைபுடைய யாதென்பதனை எவனின் பின்வையாது, முன்வைத்த முறையன்றிக் கூற்றினான் அச்சூத்திரத்து எடுத்தோத்தானும், இலேசானும் அறியாப் பொருளிடத்து ஐயந்தீர்த்தற்கும் வருமெனக்கொள்க. (எ - டு.) நமருள் யாவன் போயினான்? அவற்றுள் எவ்வெருது கோட்பட்டது என்றாற்போல்வன. இச் சூத்திரத்தாற் கூறியது வழுவமைதியன்றோ எனின், முன்பு அறியாப்பொருள் என்றதும் ஒருவகையானும் அறியாமையென்பது இன்மையின், அதனைப் பார்க்க இது சிறுபான்மையென்பதல்லது வழுவென வாகாது என உணர்க. இவற்றாற் சொல்லியது வினாப் பொருண்மேன் நிகழும் சொற்களது பெரும்பான்மை சிறுபான்மை மரபிரக்கணம் என உணர்க. (32) |