என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள்தான் வரையறை யுள்ளதூஉம் இல்லதூஉம் என இருவகைத்து; அவற்றுள் வரையறை யுள்ளது தொகை பெறும்வழிப் படுவதோர் மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) இத்துணையென்று வரையறுக்கப்பட்ட சினைக் கிளவியும், முதற்கிளவியும் தம்மை மேலொரு வினையொடு படுத்துச் சொல்லுவதாக அதற்குக் தொகை கொடுத்துக் கூறுமிடத்து அத் தொகைச்சொல் இறுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுதலை வேண்டும், (எ - று.) (எ - டு.) நம்பி கண்ணிரண்டும் நொந்தன, நங்கை முலையிரண்டும் வீங்கின; இது சினைக்கிளவி. தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார், முப்பத்து மூவரும் வந்தார்; இவை முதற்கிளவி. வினைப்படு தொகுதி என்றமையான் தொகை கொடாத வினைப் பாட்டின்கண் உம்மையின்றியும், கண் நொந்தது கண்நொந்தன எனவரும். ‘இரு தோள் தோழர்பற்ற’ எனவும்’ ‘ஒண்குழை யொன்றொல்கி’ எனவும், உம்மையின்றி வந்தனவும் உளவாலெனின் அவை செய்யுள்; தொகுக்கும்வழித் தொகுத்தலென்பதனால் தொக்குநின்றன. இவ்வாறு வழக்கினுள் இல்லை யென்றுணர்க. “இருதிணை மருங்கின் ஐம்பாலறிய’ என்ற சூத்திரத்துள்ளும் உம்மை யின்றி வந்தன. உடம்பொடு புணர்த்த லென்பதனால் செய்யுளுள் உம்மையின்றி வருவனவும், உளவென்றலும் ஒன்று. இது சிறு பான்மை. இனி வினைப்படாத பெயர்ப்பாட்டின்கண் தமிழ்நாட்டு மூவேந்தர் இவர் எனினும் அமையும் என்பது. (33) |