என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள் இல்லதும் உள்ளதும் என இருவகைத்து; அவற்றுள் இல்லதன்மேற் பிறக்கும் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உலகத்து இல்லாப் பொருளும் மேலதனோடு ஒத்த இயல்பினையுடைத்து, (எ - று.) அன்னவியல்பு என்பது மேலும் பிறபொருள் ஒழிந்தனவும் உளவெனப்படுதற்கு அஞ்சி முற்றும்மை கொடுக்க என்றான். அதுபோல ஈண்டும் ஒழிவதஞ்சி எச்சவும்மை கொடுக்க என்பான் அன்னவியல் என்றான் என்பது. (எ - டு.) முயற்கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் அம்மிப்பித்தும் துன்னூசிக் குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை யெனவரும். மேற் சூத்திரத்து முற்றும்மையோடு இச்சூத்திரத்தை மாட்டேற் றலின் முயற்கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் யாண்டும் இல்லை என்பது உதாரணமாகற்பாற் றெனின், யாண்டும் என்னாது இல்லை யெனவும் வழக்கமைதலின் இதுவே பொருளன்மையை வாளாதே இல்லை யென்பதன்றி ஓர் இடத்தொடுபடுத்து இல்லை யென்புழி எச்சவும்மை கொடாது விடிற் பிறவிடத் துண்மை சேறலின் மாட்டேற் றொருபுடைச் சேறல் என்பதாகக்கொண்டு மேற்காட்டிய உதாரணமாகற்பால என்பது. (34) |