என் - எனின் சொற்றொகுத்து இறுத்தல் என்னுஞ் செப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எவ்வகைப்பட்ட பொருளாயினும் தன்னுழை யுள்ள தல்லதனை இல்லையெனலுறுமே யெனின், அவன் வினாவின பொருளல்லாத பிறிதுபொருள் கூறி இல்லையென்க. (எ - று.) (எ - டு.) பயறுளவோ வணிகீர் என்றக்கால் உழுந்தல்லது இல்லை யென்க. பயறுளவோ என்றால் அல்லதென்ப தொழியவும் பயறில்லைஉழுந்துள என இந்நிகரனவுஞ் சொல்லுப வாகலான் அல்லதென்பது வேண்டா வெனின், அல்லதென்பது அஃறிணை யொருமைப்பாற்குரியதே எனினும் மற்றை நான்கு பாற்கண்ணும் பால்வழுவாயுந் திணைவழுவாயுஞ் சென்று மயங்கல் கண்டு, அதனைக் காத்தற் பொருட்டாகச் சொல்லினார் என்பது. (எ - டு.) அவனல்லது, அவளல்லது, அவரல்லது, அதுவல்லது, அவையல்லது எனவரும். அவனல்லது என்புழி அல்லது என்பதனைப் பின் பிறன் இல்லை என்று வருவதனோடுபடுத்து வழுவாதல் அறிக. அப்பொருளல்லா என்பது மிகை; அதனாற் பிறிது பொருள் கூறும் வழியும் அவன் வினாயதற்கு இனமாயவற்றையே கூறுக என்றவாறு. இதனாற் சொல்லியது செப்பின்கண் பிறப்பதோர் வழுக்கண்டு அதனை அமைத்தற்குக் கூறியவாறாயிற்று. இதனுள் வழுவென்பது என்னை யெனின், அவன் வினாயதனை மறுப்பதன்றி, அவன் வினவாத பிறிதொன்றனையும் உடம்பட்டுக் கூறினமையின் என்பது. வழுவமைதியேற் பிறிதுபொருள் கூறுக என விதிக்கற்பாற்று அன்றெனின் அவ்வாறு கூறலாகாதென மறுத்து இவ்வாறு கூறுக எனப்தோர் விதி நீர்மைத்தது என்பது. (35) |