என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலியெடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகார நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயருரைப்பவே விளங்கும். இவ் வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ வெனின், காரணக் குறி. என்னை காரணம் எனின், சொல்லுணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை கிளவியாக்கம் எழுவாயாக, எச்சவியலிறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கட்கிடந்த விகற்பமெல்லாம் ஆராய்ந்தார் எனக்கொள்க. அதிகாரம் என்றதன் பொருண்மை என்னையெனின் முறைமை. அவ் வோத்துக்களுள்ளும் எனைத்துவகையான் உணர்த்தினானோவெனின் எட்டுவகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினான் என்பது. அவை யுணரச் சொல்லுணர்ந்தானாம். அவை யாவையெனின் இரண்டு திணைவகுத்து, அத்திணைக்கண் ஐந்துபால் வகுத்து, ஏழுவழு வகுத்து, எட்டுவேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டிடத்தான் ஆராய்ந்தானாம் என்பது. சொல்லிற்கிலக்கணமாமாறு என்னையோவெனின் 2இன்மைமுகத் தானும் உண்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாமென்றுணர்க. அவற்றுள் இரண்டு திணையாவன உயர்திணையும் அஃறிணையும் என இவை. ஐந்துபாலாவன ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென இவை. ஏழுவழு வாவன திணைவழூஉ, இடவமூஉ, காலவழூஉ, மரபு வழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவை. வேற்றுமை எட்டாவன எழூவாய்வேற்றுமை முதலாக விளி வேற்றுமையீறாகக் கிடந்த இவை. தொகையாறாவன வேற்றுமைத்தொகை, உவமத்தொகை வினைத் தொகை, பண்புதொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை யென இவை. மூன்றிடமாவன தன்மை, முன்னிலை, படர்க்கை என இவை. மூன்றுகால மாவன இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என இவை. இரண்டு இடமாவன வழக்குஞ் செய்யுளுமாகிய இவை. சொல்லிலக்கணங்கள் எட்டு என்றற்கு விதி உரையிற்கோடலென வுணர்க. இனிப். பிறவிலக்கணமுண்டெனினும், இவை பெரும்பான்மைய வென்றாதல், அவையும் இவற்றுள் அடங்குமென்றாதல் கொள்ளப்படும் என்க. மற்றுச் சொல்லென்றதற்குப் பொருண்மை என்னையெனின், ஓசை யென்றவாறு. ஆனால் கடலொலியும், காரொலியும், விண்ணொலியும் சொல்லாம் பிறவெனின், அற்றன்று, ஓசையெனினும், அரவமெனினும், இசையெனினும், ஒலியெனினும், எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் லோசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்ற மெனினும், மொழி யெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும். எனவே, எழுத்தோடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ எனின், உள; அவை 3முற்கும் வீளையும் இலதையும் அனு கரணமும் என்றித்தொடக்கத்தன. அவை சொல்லெனப்படா. பொரு ளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசைமேலதன்று ஆராய்ச்சி. எனவே எழுத்தல்லோசையும், எழுத்தொடுபுணராது பொருள் அறி விக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி மிறிஞி யென்றாற்போல வரும் ஓசையும் என ஓசை நான்கு வகைப் படும். அந்நான்கனுள் பின்னின்றி விரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப் படுகின்றன. மேலதிகாரத்தோடு இவ்வதிகாரத்திடை இயைபு என்னையோ வெனின் மேற்பாயிரத்துள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் என நிறுத்தார். நிறுத்தமுறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்திய வெடுத்துக்கொண்டார் என்பது. எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னையெனின், தன்னை யுணர்த்திநின்றவழி எழுத்தெனப்படும்; தான் இடை நின்று பொரு ளுணர்த்தியவழிச் சொல்லெனப்படும். இம்முதலோத்து என்னுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், கிளவியாக்கமென்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல்; ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த்து. ஒருவன் மேலாமாறு இது, ஒருத்தி மேலாமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழுவமையுமாறு இது எனப் பொருட்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்க மென்னும் பெயர்த்தாயிற்று. மற்று, ஏனையோத்துக்களுள்ளும் பொருட்கண் மேலாமாறேயன்றோ உணர்த்தினது; மாறுணர்த்தியதில்லை யெனின், ஏனையோத்துக்களுட் பொருட்கண்மேலாய் நின்றவற்றிலக்கண முணர்த்தினார்; ஈண்டு அவைதம்மை யாமா றுணர்த்தினார் என்பது. மற்றுப் பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமெனச்சொல்லும் நான்கேயாதலான் ஓத்தும் நான் கேயாகற் பாலவெனின் ஆகா. என்னை? நான்கு வகைப்பட்ட சொல்லிற்குப் பொதுவிலக்கணம் இவ்வோத்தினுள் உணர்த்தினார். அவற்றுள் முதற்கண்ணது பெயர்ச்சொல்லாதற்கு இலக்கணம் வேற்றுமையோத்துள்ளும், வேற்றுமைமயங்கியலுள்ளும், விளிமரபினுள்ளு முணர்த்தினார். உணர்த்தி, அதன்பின்னே கிடந்தவினையை வினையியலுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த இடைச்சொல்லை இடைச்சொல்லோத்தினுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த உரிச்சொல்லை உரிச்சொல்லோத்தினுள் உணர்த்தினார். பின்னை எல்லா வோத்தினுள்ளும் எஞ்சி நின்ற சொற்களை எச்சவியலுள் உணத்தினார். இவ் வகையான் எல்லாம் உணர்த்தினாராகலின் இவ்வோத்தெல்லாம் வேண்டிய தூஉம், இம்முறையே கிடந்ததூஉமாயிற்று. இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இனி, (இ - ள்) உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே என்பது உணர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருளை என்றவாறு. அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்பது அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரினீங்கிய அல்லவாகிய பிறபொருளை என்றவாறு, ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே என்பது அவ்விரண்டு பொருளையும் உணர்த்துஞ் சொற்கள் என்றவாறு. எனவே உயர்திணைச்சொல்லும் உயர்திணைப்பொருளும், அஃறிணைச் சொல்லும் அஃறிணைப் பொருளும் எனச் சொல்லும் பொருளு மடங்கி. உயர் என்னும் சொல்லின் முன்னர்த் திணை என்னுஞ் சொல்வந்து இயைந்தவாறு யாதோவெனின், ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலை வகையான் வருதலும், எண்ணுநிலை வகையான் வருதலும், பயனிலை வகையான் வருதலுமென இம் மூன்று வகையல்லதில்லை. இதற்கு விதி உரையிற்கோடல் என்னுந் தந்திரவுத்தி. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தது யானைக்கோடென்பது எண்ணுநிலை வகையான் வந்தது நிலனுநீருமென்பது, பயனிலை வகையான் வந்தது சாத்தனுண்டான் என்பது. மற்று எச்சவகை அடுக்குவகை பொருள்கோள்வகை ஆக்கவகை இடைச் சொல்வகை உரிச்சொல்வகை யென்றாற்போலப் பிறவும் வகையுளவெனின், நால்வகைச் சொல்லினும் சிறப்புடைய பெயரினையும், வினையிற் சிறப்புடைய முற்றுச் சொல்லினையும்பற்றி, வழக்கிடத்தும் பெரும்பான்மையும் வருவன அவையேயாகலின் அம்மூன்றல்லது இல்லையென்றார் போலும். அவையாவன:- எச்சவகை: உண்டுவந்தான், உண்டசாத்தான் என்றாற் போல்வன. அடுக்கு வகை: பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ என்றாற்போல்வன. பொருள்கோள்வகை : சுரையாழ அம்மிமிதப்ப என்றாற்போல்வன. ஆக்க வகை: சாத்தான் தலைவனாயினான் என்றாற்போல்வன. இடைச்சொல்வகை: ‘யானோ தஞ்சம் பெரும’ என்றாற்போல்வன. உரிச்சொல்வகை ‘செய்யார் தேஎந் தோமரல் கலிப்ப‘ என்பன. அவற்றும் இதுதொகைநிலை வகையான் வந்தது. தொகைநிலைவகை யாறனுள்ளும் வினைத்தொகை. வினைத்தொகை மூன்றனுள்ளும் இறந்தகால வினைத்தொகை. என்மனார் என்றது என்பவென்றும் முற்றுச் சொல்லினைக் ‘குறைக்கும் வழி குறைத்தல்’ என்பதனால் பகரங் குறைந்து, ‘விரிக்கும் வழி விரித்தல்’ என்பதனான் மன்னும் ஆரும் என்பன இரண்டு இடைச் சொற்பெய்து விரிந்து என்மனாரென்றாராயிற்று. இம் முற்றுச் சொற்கும், பெயராகிய ஆசிரியரென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கது; இஃதெச்சவகை. என்றாரெனற்பாலதனைக் காலமயக்கத்தால் என்மனார் என்றாரென உணர்க. இனி, உயர்திணை யென்பதற்குமுன் என்ப என்னும் சொல் முதனூலாசிரியனது கூற்றினைப் பின், தான் கூறுகிற மக்கட்சுட்டென்பதனோடு இயைவித்தற்குக் கொண்டு கூறு நிலைமைக்கண் வந்ததாகலின் உயர்திணை யென்னுஞ் சொல்லும். என்ப என்னுஞ் சொல்லும், பின்வருகிற “மக்கட் சுட்டு” என்னுஞ் சொல்லினோடு வேற்றுமைத் தொகையுள் இறுதியுருபுத் தொகைநிலை வகையான் வந்ததென்ப. பொருளியைபு கூறுவதல்லது தம்முட் சொல்லியைபு இலவென வுணர்க. மக்கட் சுட்டென்பது மக்களாகிய சுட்டு; என்பதன் பொருள் நன்கு மதிப்பு. அஃதாகுபெயரான் மக்கண்மேனின்றது. மக்களென்னாது சுட்டென்றது தான் உயர்திணையென இடுகின்ற குறியீட்டிற்குக் காரணம் இதுவென்பது விளக்கல்வேண்டிப்போலும். இனி, ஆசிரியரென்பதனோடு மக்கட்சுட்டு என்பதூஉம் பொருளியை பல்லது சொல்லியைபு இன்றென வுணர்க. ஏ என்பது ஈற்றசை. அஃறிணை என்பது அல்லாததாகிய திணையெனக் குணப்பபண்புபற்றி வந்த பண்புத்தொகை. உயர்திணை யல்லாததாகியதென மேனின்ற உயர்திணை என்னுஞ் சொல் வருவித்துக் கொள்க. உயர்திணை யென்பதற்கு ஏற்ப, இழிதிணையென்று இல் என்னும் பொருணோக்கம்; என உணர்க. முன்னின்ற சுட்டென்பதன் முன் அஃறிணை யெனவந்த சொல்லும் சூத்திரத்துட் பொருட்படை யென்னும் வினைமுடிவினிறுதிக்கண் வந்ததாகலின் பொருளியைபல்லது சொல்லியைபின்றென உணர்க, ஈண்டும் என்மனாரென்பது மேற்சொல்லியவாறே நின்றதெனவுணர்க. அவரல வென்பது நீக்கப் பொருண்மைக்கண் தொக்க ஐந்தாம் வேற்றுமைத் தொகை. அலபிற என்பது அல்லவாகியபிற என இரு பெயரொட்டுப் பண்புத்தொகை யென வுணர்க. பிறவற்றை என்னும் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கு நின்றது.4 அவரல்ல என்னாது பிறஎன்றது அஃறிணை உயிருடையனம் உயிரில்லனவும் என இருகூறாய், அவ்விரு கூறும் தத்தம் வகையானும் வேறுபட்டு நின்றமை விளக்கிய வென்பது. ஏ என்பது ஈற்றசை. அ என்னும் சுட்டு “நீட வருதல் செய்யுளுள் உரித்தே” யென்பதனான் நீண்டு, பிறவும் வேண்டும் செய்கைப்பட்டு, ஆயிருதிணையென நின்றது. இருதிணை என்பதனோடு அவ்வென்பது பெயர்பற்றிவந்த தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல்லென்பது அல்லது மூவகையுட் சொல்லியைபு கூறப்படாது. இருதிணை என்பது இரண்டாகிய திணை யென இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. பிற என்பதனோடு ஆயிருதிணை யென்பதூஉம் பொருட்படையாகிய வினைமுடிவின்கண் வந்தாதகலிற் சொல்லியைபு இன்றென்பது. திணையென்பதனோடு இசைக்கும் என்பது தொகை நிலையான் வந்தது. தொகையுள் இரண்டாம் வேற்றுமைத்தொகை பொருள்நிற்ப வுருபு தொகுதலின் உருபுத்தொகை யெனப்படும். இனி ‘பெயரும் தொழிலும்’ என்றெழுந்த பொதுவிதியை இரண்டாவதற்கு விலக்கிச் ‘சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலும்’ என்று சிறப்புவிதி யோதுதலின் செய்யுள் விகாரத்தாற் சாரியை நிற்ப, உருபு தொக்கது போலும். ஆயிருதிணையையும் என்னும் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இசைக்கும் என்பது செய்யுமென்னு முற்றுச்சொல். அது பின் நின்ற சொல்லென்பதனோடு பயனிலை வகையான் வந்தது. “இசைப்பு இசையாகும்” என்பதனான் இசைக்கும் என்பதன் பொருள் ஒலிக்குமென்பதே யாயினும், சொல்லிற்குப் பொருளுணர்த்தும் வழியல்லது ஒலித்தல் கூடாமையின், உணர்த்து மென்னும் தொழிலை இசைக்குமென்னும் தொழிலாற் கூறியவாறாகக் கொள்க. இதுவுமோர் மரபுவழுவமைதி போலும். பொருளை உணர்த்ததுவான் ஒரு சாத்தனேயெனினும் அவற்கது கருவியாக அல்லது உணர்த்தலாகாமையின் அக்கருவிமேல் தொழிலேற்றிச் சொல் உணர்த்தும் என்று கருவி கருத்தாவாகச் சொல்லிற்றாக உணர்க. ‘மன’ என்பதூஉம் வினைபற்றிய அசைநிலை இடைச்சொல்லாகலின் அதனோடியைபு கூறப்பட்டது. மன் என்று பாடமோதுவாரும் உளர். இச்சூத்திரத்தாற் சொல்லிய பொருள் இவ்வதிகாரத்துச் சொல்லுகிற சொல்லது தொகைவரையறையும், அதனை வரையறுக்குங்கால், பொருளானல்லது வரையறையின்மையின் அப்பொருளது தொகைவரையறையும், பொருட்டு நூலகத்து ஆட்சி பெற்ற குறியீடும் உணர்த்தினவாறாயிற்று. (1)
1. எழுவாயாக முதலாக. 2. இன்மைமுகத்தான் அமைந்த இலக்கணமாவது “வினையெனப் படுவது வேற்றுமைகொள்ளாது” என்றாற்போல மறைவகையான் வருவன. உண்மைமுகத்தான் அமைந்தவாவன “நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” “‘பெயரெனப் படுபவை..........தோன்றலாறே” என்றாற் போல விதிமுகத்தான் அமைந்தவை. 3. முற்கு - முக்குதலின் ஒலி. வீளை - நாக்கைமடித்துச் செய்யப்படும் சீழ்க்கை என்னும் ஒலி. ‘சிட்டி’ என வழங்கும். இலதை - அடி நாவடியிற் காட்டப்பெறும் ஒலிக்குறிப்பு என்பர் இராமாநுச கவிராயர். அனுகரணம் ‘குளுகுளு’ ‘கடகட’ என்றாற்போல ஒன்றன் ஒலிபோன்ற ஒலி. 4. உரியியல் 12 ஆம் நூற்பா. |