என் - எனின் இதுவும் ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. (இ - ள்.) இயற்பெயராகிய சொல்லும், சுட்டுப்பெயராகிய சொல்லும், வினைச்சொற்கண்ணே கூடவருங் காலந் தோன்றின் அவற்றுட் சுட்டுப்பெயர்க்கிளவியை முற்படச் சொல்லார்; இயற் பெயருக்குப் பின் வைத்துச் சொல்லுக என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.) சாத்தன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க; கொற்றி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க என்றாற்போல்வன. தன்னின முடித்தல் என்பதனானே விரவுப்பெயர்களின் இயற்பெய ரொழிந்தனவுங் கொள்ளப்படும். (எ - டு.) முடவன் வந்தான் அவற்குச் சோறுகொடுக்க என்றாற் போல்வன. இயற்பெயர் வழிய என்ற மிகையான், உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப்பெயர்க்குஞ் சுட்டுப்பெயர் பிற் கூறுக என்பது கொள்ளப்படும். (எ - டு.) நம்பிவந்தான் அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது அதற்குப் புல் இடுக எனவரும். ஒருங்கியலும் என்ற மிகையான் இம்மூவகைப் பெயர்க்குஞ் சுட்டுப் பெயர் கூறும்வழி அகரச்சுட்டே கிளக்க என்பது கொள்ளப்படும். வினைக்கொருங்கியலும் என்று வினைக்கே கூறுதலாற் பெயர்க்கு யாது முற்கூறினும் அமையும் என்பது. (எ - டு.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் எனவரும். இதனாற் சொல்லியது பொருட்பெயரோடு சுட்டுப்பெயர் கூறும்வழி பிற்கூறாது முற்கூறின் பிற பொருள் மேலே நோக்குப்படநிற்பது கண்டு அவ்வாறு கூறற்க என மரபு வழுக் காத்தவாறு. (எ - று.) (38) |