எய்தியது விலக்கல்
 

39.

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.
 

என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று,  

(இ - ள்.)   மூவகைப்    பெயர்களுள்   சுட்டுப்பெயரை  முற்படச்
சொல்லுதல் செய்யுளிடத்தாயின் அமையும், (எ - று.)

(எ - டு.) “அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்,
       
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி -  
                                       முகனமர்ந்
         தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல்,
         பின்னை யதன்கண் விளைவு”

என வரும். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இதனாற் சொல்லியது   முற்கூறலாகாது   என்னப்பட்ட சுட்டுப்பெயர்
மொழிமாற்றியும் பொருள்கொள்ளும் நயம்  செய்யுட்கண்  உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று.            (39)

******************************************************************