சுட்டுமுதலாகிய காரணக்கிளவியைச் சொல்லும்முறை
 

40.

சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய ரியற்கையின் செறியத்தோன்றும்.

 

என்  -  எனின்  இதுவுஞ்  சுட்டுப்பெயர்   ஆராய்ச்சியே  கூறுதல்
நுதலிற்று.

(இ - ள்.)  சுட்டெழுத்தை    முதலாகவுடைய   காரணப்பொருளை
உணரநின்ற  சொல்லும்  மேற்கூறிய   சுட்டுப்பெயர்   இயல்பு  போலப்
பெயரப்பின்னே யாப்புறத் தோன்றும், (எ - று.)

(எ - டு.)  சாத்தன்   கையெழுதுமாறு   வல்லன்   அதனால்  தன்
ஆசிரியன்  உவக்கும்;  சாத்தி  சாந்தரைக்குமாறு   வல்லள்   அதனாற்
கொண்டவன்   உவக்கும்   எனவரும்.   மேற்கூறிய   வகைகளெல்லாம்
இதற்கும் ஒக்கும்.

இதுவும்  ஆண்டே  யடங்காதோவெனின், ஆண்டுச் சுட்டுப்பொருள்
வழி   வந்தது,  ஈண்டு  அப்பொருளது   குணத்துவழி   வந்தது  என
உணர்க.                                                 (40)

******************************************************************