என் - எனின் இதுவும் ஒருபொருண்மேல் இருபெயர் வழுக்காத்தலை நுதலிற்று. (இ - ள்.) சிறப்பினாகிய பெயர்ச்சொற்கும் உம்மையாற் பிற பெயர்க்கும் இயற்பெயராகிய சொல்லை முற்படச் சொல்லார்; பிற்படச் சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.) ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன்,படைத்தலைவன் கீரன் என இவை சிறப்புப்பெயர். பிறவும் என்றது குலத்தினான் ஆயபெயரும், கல்வியினான் ஆய பெயரும், தொழிலினான் ஆயபெயரும், பிறவும் என்பது. (எ - டு.) சேரமான் சேரலாதன். சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன்: இவை குலப்பெயர். ஆசிரியன் சாத்தன் என்றாற்போல்வன கல்வியினா னாகிய பெயர். வண்ணாரச்சாத்தன், தச்சக் கொற்றன், நாவிதன் மாறன்: இவை தொழிலினானாகிய பெயர். இதனாற் சொல்லியது ஒருபொருட்கு இருபெயர் கூறும்வழி யாது முற்கூறினும் அமையும் என்று கூறலாகாது. மேற்றொட்டுங் கூறிவந்த மரபானே கூறாவிடின் அப்பொருண்மேற் செல்லாது பிறபொருண்மேல் நோக்குப்படுமென மரபு வழுவற்க என்றவாறாயிற்று. (41) |