ஒருபொருள்மேல் பலபெயர் வரின் அவற்றைச்
சொல்லும் முறைமை
 

42.

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.

 

என்  -  எனின்   ஒருபொருள்மேற்  பலபெயர்  வழூஉக்  காத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச் சொற்
பெயர்க்கு  வரும்  வினையை  வேறுபடச்  சொல்லின் ஒரு பொருட்குப்
பொருந்தும்   இடமில்லை,   அதனான்    வரும்பெயரை   யெல்லாஞ்
சொல்லிப் பின் தொழில்சொல்லுக, (எ - று.)

(எ - டு.)  ஆசிரியன்  பேரூர்கிழான்  செயிற்றியன் இளங்கண்ணன்
சாத்தன் வந்தான் என வரும்.

இனி இரட்டுற  மொழிதல்  என்னும்  ஞாபகத்தால் ஒரு பொருளைக்
கருதிய  வேறு  வேறாகிய  பெயர்ச்  சொற்கள்  வேற்றுத்  தொழிலைப்
பெயர் தோறுஞ் சொல்லின் ஒரு பொருட்குப்  பொருந்தும் இடமில என
வேறல்லாத   ஒரு   தொழிலைப்    பெயர்தோறுஞ்  சொல்லின்   ஒரு
பொருட்குப் பொருந்தும் இடனுடையதூஉங் கொள்ளப்படும்.

(எ - டு.)  ஆசிரியன்     வந்தான்,     பேரூர்கிழான்   வந்தான்,
செயிற்றியன்  வந்தான்,  இளங்கண்ணன்  வந்தான்,  சாத்தன்  வந்தான்
எனவரும்.

இதனாற் சொல்லியது  ஒரு  பொருள்மேல்  வரும்  பல பெயர்க்கண்
மரபிலக்கணமும் மரபு  வழுவமைதியுங்  கூறியவாறாயிற்று.  ஞாபகத்தான்
கொண்டது  மரபு  வழுவமைதி.   அதனை   வழூஉவென்றது  என்னை
யெனின்  ஒருநிலைக்கண்  அதுதானே பல  பொருள்மேலுஞ்  சேறலான்
என்பது.                                                 (42)

******************************************************************