என் - எனின் எண்ணின்கண் திணைவழு வமையுமாறு உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) தன்மையாகிய சொல்லினையும் அஃறிணையாகிய சொல்லினையும் விரவி யெண்ணுமிடத்து உண்டாகிய திணைவிராய் வருதலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், (எ - று.) என்று என்றது எண்ணசை. (எ - டு.) “யானும் என் னெஃகமுஞ் சாறும்” “அவனுடைய யானைக்குஞ் சேனைக்கும் போர்” என வரும். இதனுள் அவன் வந்தது என்றாற் போலும் திணை வழுவில்லை யெனின். அதுவேயல்ல, திணைவழூஉ எண்ணுமிடத்தும் இன மொத்தனவே எண்ணுக என முன் சொல்லினமையானும், திணைவழுவாவது பொருந்தாது விடுவது என்பதாகலானும், இதுவும் திணைவழூஉ எனப்படும். இவ்வாறு இடர்ப்படுகின்றது என்னை? இதனை மரபு வழுவமைதி என்று கூறுக எனின், ‘வியங்கோ ளெண்ணுப் பெயர் திணைவிரவு வரையார்’ என ஆசிரியர் மேற் கூறுகின்றமையின் இதற்கும் அதுவே கருத்து என்பது பெறுதும். இனிச் சொல்லொடு சொல் முடித்தலே திணைவழு வெனினுஞ் ‘சாறும்’ என்னும் உயர்திணை முற்றுச் சொல்லே எஃகம் என்னும் அஃறிணையினையும் உளப்படுத்தமையின் வழுவும் இதன்கண் உண்டு என உணர்வது. மருங்கின் என்ற மிகையான், முன்னிலையோடு அஃறிணை எண்ணுதலும், படர்க்கையொடு அஃறிணை எண்ணுதலும் கொள்க. (எ - டு.) நீயும் நின்படைக்கலமுஞ் சாறிர், அவனும் தன் படைக்கலமும் சாறும் எனவரும். இவற்றுள், எண்ணுவழு வல்லது முடிபுவழுவில்லை. இதனாற் சொல்லியது எண்ணுப்பொருட்கண் திணைபற்றிப் பிறக்கும் மரபு வழுவமைதி யென உணர்க. சிறுபான்மை திணைவழூஉ வமைதியும் என வுணர்க. (43) |