என் - எனின் வேறுவினைப் பொதுச் சொற்களது மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ - ள்.) வேறு வினையுடையவாகிய பல பொருளையும் பொதிந்துநின்ற பொதுச்சொல்லை ஒரு பொருளது வினையாற் சொல்லார் உலகத்தார்; அதனான் அவற்றிற் கெல்லாம் பொதுவாகிய வினையானே சொல்லுக, (எ - று.) (எ - டு.) அடிசில் கைதொட்டார், அயின்றார்; அணிகலம் அணிந்தார், மெய்ப்படுத்தார்; இயம் இயம்பினார், படுத்தார் எனவரும். இதனாற் சொல்லியது பலபொருட்குரிய பொதுப் பெயர்ச்சொல்லை எடுத்து மேலதன் வினைகூறும் வழி மரபு வழுவற்க என்றவாறு. இஃதிலக்கணமாகப் பல பொருளும் ஒருசொல்லுதற்கண் அடங்கி நில்லாது வேறு வேறு அடிசில் எனவும், அணி எனவும் வரும் வரவும், ஒன்றன்வினை யொன்றற்கு வரும் வரவும் வழுவாக்கிச் “செய்யுண் மருங்கினும்” (எச்ச-61) என்னும் அதிகாரப் புறனடையான் அமைத்துக் கொள்க என்பது. (46) |