உயர்திணை முப்பால் எனல்
 

2.

ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே.

 

என் - எனின்  மேல்  திணை  கூறுசெய்தார்; இனி அத்திணைக்கண்
பால் கூறுசெய்தல் நுதலிற்று.

(இ - ள்) ஆண்மகனை   யறியுஞ்   சொல்லும்,  மகளிரை  யறியுஞ்
சொல்லும்,  பலரை   யறியுஞ்  சொல்லொடு  கூடி, அம்மூன்று பாலினை
உணர்த்துஞ் சொல்லும் உயர்திணையன (எ - று.)

அறிசொல் என்புழிச்  சொல்லிற்கு  அறிதல் கூடாமையின்,  சாத்தன்
அறியுஞ்சொல்  என  ஒரு   பெயர்   வருவித்துக்கொள்க. ஏ : ஈற்றசை.
அவ்வே என வகரஞ் செய்யுள் விகாரத்தான் வந்தது.

சிவணி     என்பது பல்லோர் அறியுஞ் சொல்லொடு  கூட என ஒரு
தொகைப்பொருண்மை  தோன்றநின்றதோர்   சொல்லென்று   சொல்லுக.
இவ்வாறன்றிச் சிவணி  யென்பதைச்  செய்தென்னும்  வினையெச்சமாக்கி
“உயர்திணைய”     என்னும்      ஆறாம்    வேற்றுமை    வினைக்
குறிப்புநீர்மையுமுடைமையின்   அதனோடு   முடிந்ததெனக்  கூறுவாரும்
உளர்.”

இதனாற்      சொல்லியது,   மேற்கூறிய   உயர்திணை   யென்பது,
விரிவகையான்   ஆண்பால்    பெண்பால்   பன்மைப்பாலென  மூன்று
கூறுபடும்     என்பதூஉம்,     அப்பொருள்      முக்கூறுபடுமெனவே
தந்திரவுத்திவகையான்   மேற்கூறிய    உயர்திணைச்   சொல்  என்பது
விரிவரையறையான் ஆண்பாற் சொல்,  பெண்பாற்சொல்,   பன்மைப்பாற்
சொல்லென மூன்று கூறுபடும் என்பதூஉம் கூறியவாறாயிற்று.        (2)


1.  இளம்பூரணர், நச்சினார்க்கினியர்.
2.  சேனாவரையர்,  நச்சினார்க்கினியர்.

******************************************************************