என் - எனின் ஒருபெயர்ப் பொதுச் சொற்கண் மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ - ள்.)ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொல்லை ஆண்டுள்ள பொருள் ஒழிய உயர்திணைக்கண்ணுந் தெரிந்துகொண்டு வேறே கிளத்தற்குக் காரணம் அப்பொருட்கண் தலைமையும் பன்மையுமாம் என்றவாறு. (எ - டு.) பார்ப்பனச்சேரி என்பது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது. எயினர் நாடு என்பதும் குற்றிளை நாடு என்பதும் அத்திணைக் கண் பன்மை பற்றிய வழக்கு. கமுகந்தோட்டம் என்பதும் அஃறிணைக் கண் தலைமைபற்றி வந்தது. இது தானே பன்மை யுள்வழிப் பன்மை பற்றி வந்ததூஉமாம். ஒடுவங்காடு, காரைக்காடு என்பன பன்மைபற்றி வந்தன. சேரி என்பது பல குடியுஞ் சேர்ந்திருப்பது. தோட்டம் என் பது பலபொருளுந் தொக்கு நின்ற இடம். பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது பல பொருளும் உள்வழிப் பிறப்பதோர் பெயர்ச்சொல்லினை அப் பல பொருளினையும் உடன் கூறியன்றே கூறற்பாலது; அவ்வாறன்றி அப் பொருட்டலைமையும் பன்மையும் பற்றிச் சொல் தொகுத்திறுத்தல் கண்டு அம் மரபுவழு அமைத்தற்குக் காரணம் கூறியவாறாயிற்று. (49) 1. இவ்வரியை அடுத்த நூற்பாவின் முதல் வரியாகச் சேர்த்துக் கொள்வர் தெய்வச் சிலையார். |