ஒன்றொழி பொதுச்சொல்
 
  

50.
 
  

பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
 

என்  -  எனின் ஆன் பெண் என்னும்  இருபாற்கும் பொதுவாகிய
பெயர்க்கண் வரும் மரபுவழுக் காத்தல் நுதலிற்று.

(இ - ள்.)  பெயரினும்  தொழிலினும்   ஆண்   பெண்  என்னும்
இருபாற்குமுரிய  பொதுமையிற்  பிரிந்து,  ஒரு பாற்கண்ணே  நடப்பன
வெல்லாம்  இலக்கண  முறைமையின் மயங்கின என்று  மாற்றல் கூடா;
யாதோ  காரணமெனின்  அம்மயக்கம் வழக்கின்  அடிப்பட்டவதனான்,
(எ - று.)

அப்பொதுப்பெயர்,      உயர்திணை,   அஃறிணை,   ஆண்பால்
பெண்பாலெனவும்  பெயர்வினையோடு  வைத்துறழ  எண்வகைப்படும்.
அவையாவன:    உயர்திணைக்கண்   பெயரிற்பிரிந்த   பெண்ணொழி
மிகுசொல்லும்,    ஆணொழி   மிகுசொல்லும்,   தொழிலிற்   பிரிந்த
பெண்ணொழி     மிகுசொல்லும்,     ஆணொழி     மிகுசொல்லும்,
அஃறிணைக்கண்    பெயரிற்பிரிந்த   பெண்ணொழி   மிகுசொல்லும்,
ஆணொழி    மிகுசொல்லும்,    தொழிலிற்   பிரிந்த  பெண்ணொழி
மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும் என இவை.

(எ - டு.) வடுகரசர்   ஆயிரவர்  மக்களையுடையர்,  பெருந்தேவி
பொறையுயிர்த்த   கட்டிற்கீழ்   நால்வர்   மக்கள்   உளர்   எனவும்,
அரசனோடு  ஆயிரவர்  மக்கள் தாவடி போயினார், இன்று இவ்வூரார்
எல்லாந்   தைநீர்   ஆடுப   எனவும்  உயர்திணைக்கட்  பெயரினும்
தொழிலினும்   பிரிந்த   பெண்ணொழி   மிகுசொல்லும்   ஆணொழி
மிகுசொல்லும்,  நம்  அரசன்  ஆயிரம்  யானையை யுடையன்,  நம்பி
நூறு  எருமை யுடையன் எனவும், இன்று இவ்வூர்ப் பெற்ற  மெல்லாம்
உழவு  ஒழிந்தன, இன்று  இவ்வூர்ப் பெற்ற
  மெல்லாம்   அறத்திற்குக்  கறக்கும்  எனவும்  இவை  அஃறிணைக்கட் பெயரினுந்   தொழிலினும் பிரிந்த   பெண்ணொழி   மிகுசொல்லும் ஆணொழி மிகு சொல்லுமாம்.

எல்லாம்     என்றதனான் மேற்சூத்திரத்து  ஒருபெயர்ப்  பொதுச்
சொலன்றித்   தலைமை   பற்றி   வருவனவும்   சிறுபான்மை  பற்றி
வருவனவும் கொள்க.

(எ - டு.) ஆதீண்டுகுற்றி,  வயிரக்கடகம்  என்னுந் தொடக்கத்தன.

இன்னும் அதனானே இனஞ் செப்பாது  ஒரு  தொழிற்கண்  மிகை
விளக்குதற் பொருட்டாக வருவனவும் அமைத்துக் கொள்க.

(எ - டு.) இவர் பெரிதும் சொல்லுமாறு  வல்லர்,  இவர் பெரிதுங்
கால் கொண்டோடுவர், இவ்வெருது புல்தின்னும் எனவரும்.

இதனாற்    சொல்லியது இருதிணையிடத்தும் ஆண்பாற்கும் பெண்
பாற்கும் சொல்லுதற்கண்ணே உரிய பெயர்கள், அப்பொதுமை யொழிய
ஒரு    பாற்கண்ணே    யோடுதன்    மரபன்று;    மரபன்றாயினும்
அமையுமென்று  மரபுவழு அமைத்தவாறு. இலேசினாற் கொண்டனவும்
மரபுவழுவமைதி என உணர்க.                             (50)

******************************************************************