என் - எனின் செய்யுளகத்துத் திணைவழு வமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பல விடத்தானுந் திணை விரவி யெண்ணப்படும் பெயர் அஃறிணை முடிபினவாம்; செய்யுளகத்து, (எ - று.) (எ - டு.) ‘வடுக ரருவாளர் வான் கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்.’ எனவரும். பலவயினானும் எனறதனாற் சிலவயினான் திணை விரவாது உயர்திணை யான் எண்ணி அஃறிணையான் முடிவனவும் கொள்க என்பது. (எ - டு.) “பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று, இந்நான் கல்லது குடியுமில்லை” எனவரும். சிலவயினான் திணை விரவி, எண்ணி உயர்திணையான் முடிவனவுங் கொள்ளாமோ வெனின், சான்றோர் செய்யுட்கு அவ்வாறு வருவனவா யின்மையிற் கொள்ளாம் என்பது. ‘வடுகரருவாளர்’என்பதூஉம் சான்றோர்செய்யுள் அன்றாலெனின், 1‘கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவு, நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன் மறவரும் என, நான்குடன் மாண்டதாயினும்’ என்பதும் உண்மையின் அமையும் என்பது. அஃதே ‘திங்களுஞ் சான்றோரு மொப்பர்’ (நாலடி-) எனவும். “வேந்தன் பெரும்பதி மண்ணாண் மாந்தர் ஈங்கிம்மூவர் இதற்குரியாரே” எனவுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் வருமாலெனின் திங்களும், பதியும் என்பன அஃறிணை முடிபினவெனினும் தாம் உயர்திணைப் பொருளவாகலின். அவை இந்நிகரனவல்ல. இவற்றின்கட் சிறுபான்மை வழுவினையும் இப்பலவயினானும் என்றதனாதல் அதிகாரப் புறனடையானாதல் அமைத்தும் என்பது. இதனாற் சொல்லியது செய்யுட்கண் திணைவிரவி எண்ணியவழிப் பொதுவாக முடியாது ஒரு திணையான் முடிவது கண்டு அதனை அமைத்தவாறு. இனிப் பொது முடிபிலவென்று அஃறிணை முடிபிற்றாதற்குக் காரணம் என்னோவெனின் அவ்வாறெண்ணிய உயர்திணையும் பொருளென்னும் பொதுமையான் அஃறிணையின் அடங்கும். உயர்திணையுள் அஃறிணை அடங்காது என்பது போலும். (51)
1. புறம்.-55: 7-9. |