என் - எனின். வினை வேறுபடாப் பலபொருளொரு சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வினையினான் வேறுபடாத பல பொருள் ஒருசொல் ஆராயுங்காலத்து இன்னது இது எனக் கிளக்கப்பட்ட ஆராய்ச்சியையுடைய இடத்து நடக்கும், (எ - று.) (எ - டு.) கன்று நீர் ஊட்டுக என்புழிக் கேட்டான் இன்ன கன்றென்பது அறியானாமே யெனின், ஆன்கன்று, எருமைக்கன்று, பூங்கன்று எனக் கிளந்து சொல்லுக. ‘நினையுங்காலை’ என்றதனான் கிளவாது கூறினால் கருமச்சிதை வுண்டெனிற் கிளந்து கூறுக; அல்லுழி வேண்டியவாறு கூறுக என்பது பெறப்பட்டது. 1‘கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறார்’ என்புழிக் கருமஞ் சிதைந்தது என்பதின்மையின் கிளவாது சொல்லவும் அமைந்தது என்பது. எனவே பலபொருள் ஒரு சொல் வேறுபடுவினையான் உணரப்பட்டு நிற்றலும், வேறுபடுவினையின்றிப் பொதுவினையான் உணரப்பட்டு நிற்றலும், பொதுவினையால் கருமச்சிதை வுள்வழிக் கிளந்து சொல்லப் பட்டு நிற்றலும், கருமச்சிதை வுள்வழிப் பொதுவினையாற் கிளவாது சொல்லப்பட்டு நிற்றலும் என நான்குபகுதிப்பட்டது என உணர்க. இச் சூத்திரங்காளற் கூறியது பலபொருள் ஒரு சொல் வினைபற்றிப் பிறக்கும் மரபிலக்கணப் பாகுபாடு என உணர்க. (55)
1. குறுந்தொகை 241. |