ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் அஃறிணை மருங்கின் கிளந்தாங் கியலும். என் - எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ - ள்.) குடிமை என்னும் சொல்லும், ஆண்மை யென்னும் சொல்லும், இளமை யென்னும் சொல்லும், மூப்பு என்னும் சொல்லும், அடிமையென்னும் சொல்லும், வன்மையென்னும் சொல்லும், விருந்து என்னும் சொல்லும், குழு என்னும் சொல்லும், பெண்மை யென்னும் சொல்லும், அரசு என்னும் சொல்லும், மகவு என்னும் சொல்லும், குழவி யென்னும் சொல்லும், தன்மை திரிந்ததனாற் பெற்ற பெயர்ச் சொல்லும், உறுப்பிற் பெயர்ச் சொல்லும், காதல் என்ற சொல்லும், சிறப்பித்துச் சொல்லும், செறுத்துச் சொல்லும் சொல்லும், விறல் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட பதினெட்டுச் சொல்லும் உட்படவந்த தன்மையனவும், பிறவும் அவற்றொடு கூட்டித் தொக்கு இவ்வகையாகிய குறிப்பினான் உணரப்படுஞ் சொற்களெல்லாம் உயர்திணையிடத்தே நிலை பெற்றன வாயினும், அஃறிணையிடத்துச் சொல்லுமாறு போலச் சொல்லப்பட்டு நடக்கும், (எ - று.) (எ - டு.) இவற்குக் குடிமை நன்று, தீது; ஆண்மை நன்று, தீது; இளமை நன்று, தீது; மூப்பு நன்று, தீது; அடிமை நன்று, தீது; வன்மை நன்று, தீது; விருந்து வந்தது, போயிற்று; குழு நன்று, பிரிந்தது என வரும். இவற்கு என்பதை ஏற்புழியொட்டிக்கொள்க. பெண்மை நன்று, தீது; அரசு வந்தது, போயிற்று; மகநன்று; தீது; குழவி எழுந்தது, கிடந்தது. தன்மை திரிபெயர்; அலிவந்தது, போயிற்று. உறுப்பின் கிளவி: குருடு வந்தது, போயிற்று. காதல்: என் யானை வந்தது, போயிற்று. என் பாவை வந்தது, போயிற்று; சிறப்பு; கண்போலச் சிறந்தாரைக் கண் ணென்றலும், உயிர்போலச் சிறந்தாரை உயிரென்றலுமாம்; ஆதலின், அஃது “ஆலமர்செல்வன் அணிசால் பெருவிறல் - போலவரும் எம் உயிர், என் உயிர் வந்தது, போயிற்று; என் கண் வந்தது, போயிற்று எனவும் வரும். செறற்சொல்: கெழீஇயிலி வந்தது, போயிற்று; என் காதல் வந்தது, போயிற்று; பொறியறை வந்தது, போயிற்று. விறற்சொல்; பெருவிறல் வந்தது, போயிற்று எனவரும். ‘அன்ன பிறவும்’ என்றதனால் பேடிவந்தது, பேடிகள் வந்தன, வேந்து வந்தது, வேள் வந்தது, குரிசில் வந்தது, ஒரு கூற்றம் வந்தது, புரோசு வந்தது, உலகு வந்தது என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. இவற்குக் குடிமைநன்று என்றதன்பொருள் இவற்குக் குடிமகன் நல்லன் என்னும் பொருண்மையாகக் கொள்க. பிறவும் இவ்வாறே உயர்திணையாக உணர்க. குடிமை என்பது குடியாண்மை எனவும், ஆண்மை என்பது ஆண்மகன் எனவும், இளமை என்பது இளவல் எனவும், மூப்பு என்பது முதுமை எனவும், அடிமை என்பது அடி எனவும், வன்மை என்பது வலி எனவும், விருந்து என்பது புதுமை எனவும், குழு என்பது கூட்டம் எனவும், திரள் எனவும், ஆயம் எனவும், அவை எனவும், பெண்மை யென்பது பெண் எனவும், குழவி என்பது பிள்ளை எனவும் மதலை எனவும் பிறவும் வாய்பாடுற்றமை அறிக. இவற்றுள் ஆண்மை பெண்மை என்றாற்போல்வன விரவுப் பெயராய் நிற்கும். குடிமை அடிமை அரசு என்றாற்போல்வன உயர்திணைப் பெயராய் நிற்கும்; இவ்விகற்பமும் அறிந்து கொள்க. இக்குடிமை முதலியன எல்லாம் உயர்திணைப்பண் பாகலான் அப்பண்புச்சொல் தன்பொருண்மேல் ஒரு ஞான்றும் நில்லாது தன்னையே யுடைய பொருண்மேலே தன்பொருளுந் தோன்றிப் பிரியாது நின்றமையின் உயர்திணையாயிற்று என்பது. அவையிற்றிற்கடிபண்பு என்பது போதல் வேண்டிக் குடிமையாண்மை யெனப் பண்பு வாய்பாடு படுத்துக் கூறினார் போலும். தன்பொருண்மேல் நில்லாது என்றது என்னை, இளமை, மூப்பென் றாற்போல்வன அவற்றிக்கு அப்பண்பு தன்மேலும் வழக்குண்டால் எனின், அவ்வாறு வருவனவுஞ் சிறுபான்மை உளவேனும் அடிமை, அரசு, மகவு, குருடு, கூன் என்றாற்போல்வன பொருண்மேலன்றிப் பண்பின் மேல் வழங்கலின்மையின் அவற்றிற் கெல்லாம் முன்கூறியதே நினை வென்பது. இனி இவையெல்லாம் அப்பண்பின்மேல் எனவும், பண்புகொள வருதலென்னும் ஆகுபெயராற் பொருண்மேலே நின்றன எனவும், அவற் றுக்கண்ணது ஈண்டு ஆராய்ச்சி யெனவும், அவற்றுப் பண்புப்பொருண் மேல் வழக்கில்லனவற்றை இறந்த வழக்கென்று கூறியும் பிறவாறும் கூறுவாருமுளர். அதுவும் அறிந்து கொள்க. இதனாற் சொல்லியது பண்புநிமித்தமாகப் பொருள் நிகழுஞ் சொற்கள் பலவுந் தம் பொருட்கேற்ப உயர் திணையாய் முடியாதுசொற்கேற்ற வாற்றான் அஃறிணையான் முடிவனகண்டு அதனை ஈண்டு அமைத்தவாறு. என உணர்க. (57) |