என் - எனின் இதுவுந் திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ - ள்.) காலமென்னுஞ் சொல்லும், உலகமென்னுஞ் சொல்லும், உயிர் என்னுஞ் சொல்லும், உடம்பு என்னுஞ் சொல்லும், இருவிணையையும் யாவர்க்கும் வரைந்தூட்டுந் தெய்வத்தின் மேல் பால் எனவருஞ் சொல்லும், வினை என்னுஞ் சொல்லும், பூதம் என்னுஞ் சொல்லும், ஞாயிறு என்னுஞ் சொல்லும், திங்கள் என்னுஞ் சொல்லும், சொல் என்னுஞ் சொல்லும் என்று வருகிற பத்துச்சொல்லினோடு பிறவும் அத்தன்மையாகிய உயர்திணைப் பொருண்மேல் வருஞ் சொற்கள் எல்லாம் உயர்திணையிடத்துப் பால் உணர்த்துஞ் சொல்லால் பிரித்துச்சொல்லப்படா; அஃறிணைப்பாலால் சொல்லப்படும், (எ - று.) (எ - டு.) இவற்குக் காலமாயிற்று; உலகு பசித்தது; உயிர் போயிற்று; உடம்பு நுணுகிற்று; இவர்க்குப் பாலாயிற்று; வினை நன்று வினை தீது; இவனைப் பூதம் புடைத்தது; ஞாயிறு எழுந்தது, பட்டது; திங்கள் எழுந்தது, பட்டது; சொல் நன்று, தீது. பிறவும் என்றதனால் செவ்வாய் எழுந்தது, பட்டது; வெள்ளி எழுந்தது, பட்டது என வரும். என்னை? இவை உயர்திணையாயினவாறு எனின், காலம் என்றது காலனை; உலகமென்றது உலகத்தாரை; உயிர் என்றது உயிர்க்கிழவனை; உடம்பு என்றது அஃது உடையானை; பால் என்பது இன்பத்துன்பங்களை வகுப்பதோர் தெய்வம்; வினையென்பது வினைத்தெய்வம்; பூதம் என்பது தெய்வப்பகுதி; ஞாயிறு, திங்கள் என்பன தெய்வம்; சொல் என்பது சொன்மடந்தையை. ஆயின், இவற்றை மேலவற்றோடொன்றாக ஓதாதது என்னை யெனின், அவையெல்லாம் பண்படியாகப் பொருற்மேல் நிகழ்தலின் அவற்றை ‘முன்னத்தின் உணருங் கிளவி’ என வேறொரு வகையால் கிளவாது வரும் பெயரினையும் வேறொருவகையாக்கிக் கூறினார் என உணர்க. இவற்றுள் பூதம், ஞாயிறு, திங்கள் என்பன ஒழித்து அல்லன எல்லாம் ஆகுபெயரான் அஃறிணைப்பெயர் உயர்திணைமேல் நின்றன என உணர்க. இதனாற் சொல்லியது, இவையும் சில உயர்திணைப் பெயர் தம்பொருட்டாகுபெயராய் அதற்கேற்ப முடியாது சொற்கேற்ப முடிவதனைக் கண்டு, அதனை அமைத்தவாறாயிற்று. (58) |