என் - எனின், இஃது அருத்தாபத்தி மேற்று. (இ - ள்.) விதந்தமொழி தன்னினத்தைக் காட்டி நிற்றலும் உரித்து; உம்மையால் காட்டாது நிற்றலும் உரித்து, (எ - று.) (எ - டு.) கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது என்புழி மேற்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது சொல்லாமையே முடிந்ததாம். குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம்வீழ்தலும் முடிந்தது. இவை இனஞ் செப்பின. ஆ வாழ்க, அந்தணர் வாழ்க என்பன இனஞ் செப்பாதன. இவையும் இனம் செப்பின என்னாமோ எனின், சொல்லுவான் கருத்து அஃதன்மையானும், மறுதலை பல உள்வழி இனஞ் செப்பாமை யானும் இனஞ்செப்பாவாயின என உணர்க. (61) |