(எ - டு.)கண் நல்லள், தோள் நல்லள், முலை நல்லள் என்பனவாம். பிறவும் என்பதனால் புருவம் நல்லள், காது நல்லள் எனவும் வரும். திணைவழுஅதிகாரம் கூறிவாராநின்றதன் இடையே “எடுத்த மொழி என்று” இயைபில்லது கூறிய அதனான் ஒருமைச்சினை உயர்திணையாய் முடிவனவுங் கொள்க. (எ - டு.) மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என வரும். இதனாற் சொல்லியது உயர்திணைச் சினைப்பொருள் தனக்கேற்ற சினைவினை கொள்ளாது முதல்வினை கொண்டு முடிவன கண்டு அதனை அமைத்தவாறு என்க. ‘வினையிற் றோன்றும் பாலறி கிளவி’ முதலாக இத்துணையுஞ் சென்ற ஆராய்ச்சி எண்வகை இலக்கணத்துள்ளும் எழுவகை வழுவாராய்ச்சி என உணர்க (62) கிளவியாக்கம் முற்றும். |