என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை ஒத்து என்னும் பெயர்த்து. வேற்றுமை என்பன சில பொருளை உணர்த்தினமையால் காரணப்பெயராயிற்று. மற்று, வேற்றுமை என்னும் பொருண்மை என்னையெனின், பொருள்களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்னும் பெயராயிற்று. யாதோ வேற்றுமை செய்தவாறெனின், ஒருபொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினைமுதலாகியும், ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏது வாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குக் கருவியாகியும், ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படு பொருளாகியும், ஒருவழி ஒன்று கொடுப்பபதனை ஏற்பதாகியும், ஒருவழி ஒன்றற்கு உவமமாகியும், ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடமாகியும், ஒருவழி ஒன்றற்கு எல்லையாகியும், ஒருவழி ஒன்றற்கு உடைமையாகியும், ஒருவழி ஒன்று செய்தற்கு இடமாகியும், ஒருவழி முன்னிலையாதற் பொருட்டு விளிக்கப்படுவதாகியும், இன்னோரன்ன பிறவுமாகிய பொதுப்பட நிற்றலுடைத்து. அவ்வாறு நின்றதனைப் பெயர் முதலியன ஒரோ ஒன்றாகச் சென்று அப்பொதுமையின் வேற்றுமைப்படுத்தி ஒருபொருட்கு உரிமை செய்து நிற்றலின் வேற்றுமை எனப்பட்டது. இவ்வாறு எட்டற்கும் பொதுப்பட நின்றதோர் பொருணிலையல்லது பொதுப்பட நின்றதோர் சொன்னிலைமை வழக்கிடைக் காணாமால் எனின், அவ்வாறு வழக்கில்லை எனினும் சாத்தான், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா என ஒன்றன்வடிவோடு ஒன்றன் வடிவு ஒவ்வாது, இவ்வேற்றுமைகள் வரும் வழிச் சாத்தன் என்னும் வாய்பாடு எங்கும் நின்றமையின் பொதுநிலை என்பது உய்த்து உணரப்படும். எழுவாய் அதனோடு வேற்றுமைப்பட்டதோ எனின், சாத்தனை என்றது போல்வதோர் வாய்பாடு இல்லெனினும் அவ்வேழனோடும் ஒவ்வா நிலைமை உடைமையின் இதுவும் ஓர் வாய்பாடாயிற்று என உணர்க. அன்றியும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருண்மாத்திரம் உணர்த்தலின், எழுவாய் வேற்றுமையாயிற்று என்பாரும் உளர். அல்லதூஉம், வேற்றுமை என்பது பன்மைபற்றிய வழக்கெனினும் அமையும். இவ்வேற்றுமை செய்யும் வழிப் பலசொல் ஒரு பொருளாகியும் பல பொருள் ஒரு சொல்லாகியும் வரும். இனிப் பலசொல் ஒருபொருளாகி வரும்வழி, பல வேற்றுமை பல சொல்லாகியும், ஒரு வேற்றுமை பல சொல்லாகியும் வரும். அவையாமாறு அறிந்துகொள்க. மேலோத்தினோடு இவ்வோத்தியைபு என்னையோ எனின், மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கண் மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலது பெயர்ச்சொல்; அதற்கு இலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்தினாரோ எனின், எல்லாப் பெயர்களும் எழுவா யாகிப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், உருபேற்றலும் ஒருவழிச் சிலபெயர் உருபேலாது நிற்றலும், காலந் தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோற்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சில பெயர் விளியாது நிற்றலும், இன்னோரன்னபிறவும் பெயரது இலக்கண மென உணர்த்தினார் என்பது. பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரல் எனின், அவ்வாராய்ச்சி பெயரது இலக்கணமாய்விடுதல் உடைமையின் அமையும் என்பது. மற்று இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தன்னால் உணர்த்தப்படும் பொருளை இனைத்தென்று வரையறுத்தல் நுதலிற்று. (இ - ள்.) வேற்றுமை என்று சொல்லப்படுவனதாம் ஏழென்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.) 2தாம் என்பது சந்தவின்பம். ஏ என்பது ஈற்றசையாம் என்க. (1)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகச் கொள்வர் தெய்வச்சிலையார். 2. தாம் என்பது கட்டுரைச்சுவை பட வந்தது என்பர் சேனாவரையர். கட்டுரைச் சுவை - சந்த இன்பம். |