என் - எனின், ஒழிந்தவேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)விளிகொள்வதன்கண் விளியோடு எட்டு வகைப்படும் வேற்றுமை என்றவாறு. விளிகொள்வது என்பது, பெயரின்கண் விளி என்றவாறு. விளியோடு எட்டு என்னாது பெயர்க்கண் விளி என்றதனால் பெற்றது என்னையெனின், மற்றை வேற்றுமை போலப் பெயர்ப்புறத்துப் பிரியவராது, அப்பொருளே ஈறுதிரிதல், முதலாய வடிவினதாகி வருதல் உணர்த்திய என்றவாறு. ‘வேற்றுமை தாமே எட்டு’ என ஒரு சூத்திர மாகக் கூறாதது என்னை யெனின், இது சிறப்பின்மை அறிவித்தற்கு வேறு கூறினார் என்பது. யாதோ சிறப்பின்மை எனின், விளியேலாப் பொருளுண்மையின் என்பது. அஃதேல் பயனிலை கொள்ளப் பெயரும் உளவெனின், அதனோடு இதனிடை வேற்றுமை உண்டு. அஃது ஒருவழிக் கொள்வது ஒருவழிக் கொள்ளாதாய் நிற்கும். அது தானுஞ் சிறுபான்மை. இஃது யாண்டுங் கொள்ளாவென கொள்ளாவாயே நிற்கும் என்பது. இவ்வாறன்றி எல்லாஞ் சொல்லான் என்பதும் ஒன்று. பல சொல்லும் உள எனினும், ஐ, ஒடு, கு, இன் அது, கண் என்பன பெருவழக்கின ஆகலின் உருபினுள் அவ்வாறனையுமே கொண்டு அவற்றோடு எழுவாயினையும் விளியினையுங் கூட்டி எட்டு என்றார் என்பது. (2) |