என் - எனின், மேற் சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது, ஆறுவகைப்பட்ட பயனிலையும் ஏற்று நிற்பது என்றவாறு. (இ - ள்.) பொருட்டன்மை கருதிவரும் வரவும், ஏவலைக் கொள்ள வரும் வரவும், தனது தொழிலினைச் சொல்ல வரும் வரவும், வினாவுதற் பொருண்மைக்கு ஏற்று வரும் வரவும், தனது பண்பினைக் கொள்ள வரும் வரவும், என்று சொல்லப்பட்டவை யனைத்தும் வரும் பெயர்ச்சொல்லது பயனாகிய நிலைமை, (எ - று.) என்றது, முதல் வேற்றுமையாவது இவ் ஆறு பொருண்மையுந் தோன்ற நிற்பது என்றவாறு. அவ்வப் பொருண்மையை விளக்குவன பின் வருஞ் சொற்கள் என்றவாறு. பெயர்ப் பயனிலை யென்றது பின் வருகின்ற சொற்களேயன்று, அவ்வச் சொல்லின் பொருண்மையினைக் குறித்த பெயர் நிற்கும் நிலைமை வேறுபாடுகளை, (எ - று.) நிலை என்னாது பயனிலை என்றது அப்பெயர்களைக் கேட்பின் இப்பொழுது இப்பொருள் இன்ன நிலைமைத்து என உணரும் உணர்ச்சிக்குப் பயன் பட நிற்கும் நிலைமைய என்றற்கு என்பது. (எ - டு.) பொருண்மைசுட்டல் : ஆ உண்டு என்பது. இதன் பண்பு முதலியவற்றைக் கருதாது பொருட்டன்மையைக் கருதி நிற்றலால் பொருண்மை சுட்டல் எனப்பட்டது. உண்மை என்பது பண்பன்றோ எனின், அன்று. அப்பொருட்டன்மை என்பது போலுங் கருத்து. ஆ இல்லை என்பதும் இதன்கட் பட்டடங்கும். வியங்கொள வருதல்: ஆ செல்க என்பது. இது மேற்சொல்லுகின்ற வினை நிலையுணர்த்தலுள் அடங்கும்; ஆயினும் வேறுபாடுண்டு. அது தன்கண் நிகழ்ந்ததோர் வினை. இது மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனால் ஏவப்பட்டு நிற்கும் நிலை என உணர்க. வினைநிலையுரைத்தல் : ஆகிடந்தது என்பது. வினாவிற் கேற்றல் ஆயாது 1 என்பது பண்பு கொள வருதல் : ஆ கரிது என்பது. இதுவும் வினைநிலையுரைத்தலுள் அடங்காதோ எனின், அடங்கும் எனினும் வினைக் குறிப்பாகலான் வேறு கூறினார் என்பது. பெயர் கொள வருதல் : ஆ பல, ஆ இது என்பது. மேற்சூத்திரத்து எழுவாய் வேற்றுமை ‘பெயர்’ என்னாது ‘தோன்றுநிலை’ என்றதனால் பெயர்கள் ஓரோவழி எழுவாயாகத் தான் பயனிலை கொள்ளாது மற்றோர் எழுவாயின் பயனிலையோடு தானும் பயனிலையாயும், ஓரோவழித் தானே பயனிலையாயும், ஓரோவழி எழுவாயோடு இயைபுபடாது பயனிலைக்கு அடையாயும் பிறவாறாயும் வருவனவும் உள என்பது கொள்ளப்பட்டது. (எ - டு.) தானும் பயனிலையாயது, ஆயன் சாத்தன் வந்தான் என்பது. இது ஆயன் வந்தான் சாத்தன் வந்தான் என வினைப் பின்னும் நிற்கும் என்பது. சாத்தன் என்பது எழுவாய். ஆயன் என்பது முன்னே பயனிலையாய் நின்றதன்றாலோ எனின், அவ்வாறும் ஆம் எனினும் சொல்லுவான் கருத்து அன்னதன்று என்பது. ஆயனாகிய சாத்தன் என்பது பண்புத்தொகையாமாலோ எனின், ஓசை பிளவு பட்டிசைத்தலான் ஆகாது என்பது. தானே பயனிலையாயது, ஆ பல என்பது, பயனிலைக்கு அடையாயது, சாத்தன் தலைவனாயினானன் என்பது. பிறவாறாய் வருதல், ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்பது. ஒரு பெயர் எழுவாயாய் நில்லாது பல பெயரும் ஒருங்கே எழுவாயாய் நிற்பன எனக் கொள்க. இன்னும் இவ்விலேசினான், பெயர்கள் எழுவாயாய்ப் பயனிலை கொண்டமைந்து முற்றிநில்லாது, எழுவாய்தானும் பயனிலையுங்கூடி ஒரு சொல்நீர்மைப்பட்டு மற்றோர் எழுவாய்க்குப் பயனிலையாய் வருவனவும் கொள்ளப்படும். அவை சினையின் தொழிலை முதற் கேற்றிக் கூறலும், பண்பின் தொழிலை பண்படைந்த பொருட்கு ஏற்றிக் கூறதலும், தொழிலின் வினையைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்திற்கு ஏற்றிக் கூறலும் என இன்னோரன்ன பலவகைப்படும். (எ - டு.) சினைவினை முதற்கு ஏற்றிக் கூறல் சாத்தன் கண்நல்லன், இவ்யானை கோடு கூரிது என்பன போல்வன. பண்பின் வினை பண்படைந்த பொருட்டு ஏற்றிக் கூறல் இம்மணி நிறம் நன்று, இம்மலர் நாற்றம் பெரிது என்பன. தொழிலின் வினையைத் தொழிலடைந்த பொருட்டு ஏற்றிக் கூறல்: இக்குதிரை நடை நன்று, இத்தேர் செலவு கடிது என்பன. இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றிக் கூறல் இவ்வாறு நீர் ஒழுகும், இவ்வயல் நெல் விளையும் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இன்னும் அவ்விலேசானே எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த பெயர், தானும் எழுவாயாய்ப் பயனிலை கொண்டும், உருபேற்றும் வருவனவுங் கொள்ளப்படும். (எ - டு.) இறைவன் அருளல் எம் உயிர் காக்கும், எனவும், இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும் எனவும் வரும். இஃது ஆறாவதாம் எனினும் நோக்கு அஃதன்று என்பது. பயனிலை முன்னும் பின்னும் நிற்றலும், பயனிலை சில சொல் இடை கிடப்ப வருதலும் ஈண்டே கொள்ளப்படும். ஆ செல்க, செல்க ஆ என முன்னும் பின்னும் நின்றது. ஆ சாத்தனுய்ப்ப, எருமைத் தன்கன்றினோடு மருங்காக, தானிவ்வூரினின்றும் அவ்வூரின்கட் செல்லும், இஃதிடை கிடந்த சொல்லொடு வந்தவாறு. இறைவன் அருளல் என்பது எழுவாயொடு பொருளியைபு இன்றாயினும், வினைமுதற் பொருள் தோன்ற வந்தமையின் பெயர் கொளவருதல் என வழங்கும் என்பது. 2‘‘சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே” எனவும், 3“கோஓல் செம்மையிற் சான்றோர் பல்கி” எனவும் வரும் பண்புகளும் பொருளியைபில எனினும் ஒருவாற்றான் பெயர் கொள்ள வந்ததன் மேற்பட்டு அடங்கும் என்பது. எழுவாய் வேற்றுமையின் விகற்பங்கள் எல்லாம் வழக்கினகத்தறிந்து இவ்விலேசினகத்து அமைத்துக்கொள்க. (5)
1 ‘ஆவோ’ என்ற எடுத்துக்காட்டும் ஈண்டுக் காணப்படுகின்றது. ஆ யாது என்புழி வினையும் வினை முதலுமாய் வினாவப்பட்டுள்ளது. ஆவோ என்புழி இடைச்சொல்லாய்ப் பெயரையடுத்து வருகின்றது. ஆதலின் அது ஈண்டைக்கேற்குமா ? என்பது ஆயத்தக்கது. 2. நற்றிணை 50. 3. புறம் 117 : 6 |