பேடியும் தெய்வமும் உயர்திணைக்கண் அடங்கும் எனல்
 

4.

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்

தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ்வென வறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
 

என் - எனின்     ஐயமறுத்தலை       நுதலிற்று;       என்னை?
மேற்றொகையுள்,  ஒழிந்த,  தேவரும்,  நரகரும்,  மன்பதையு  ளொழிந்த
பேடியும்  எவ்வாறாங் கொல் என்று ஐயுற்றற்கு  அவையும்  இவ்வாறாம்
என்கின்றமையின்.

(இ - ள்.) உயர்திணையிடத்துப்  பெண்மைத்   தன்மையை  யெய்த
வேண்டி,  ஆண்மைத்  தன்மையி னீங்கிய  பேடியென்னும்  பொருளும்,
தெய்வத்  தன்மையைக்  கருதின  தெய்வமென்னும்  பொருளும்  இவை
யிரண்டும்,    இவையெனத்    தம்மை     வேறு    பாலறி   விக்கும்
ஈற்றெழுத்தினையுடைய   சொற்களை   யுடையவல்ல;    மேற்   கூறிய
மக்களென்னும்    உயர்திணையிடத்து   முப்பாலினையும்   உணர்த்துஞ்
சொற்கள் அவ்விடத்தினின்று நீங்கி வந்து தம்மை யுணர்த்தும் (எ - று.)

(எ - டு.) பேடி  வந்தாள்,  பேடியர் வந்தார், வாசுதேவன் வந்தான்,
திருவினாள்   வந்தாள்,    முப்பத்துமூவரும்  வந்தார்,   சந்திராதித்தர்
வந்தார் எனினும் அமையும்.

அந்தந்  தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவருமல்லாத நிரயப்
பாலரும்  மக்களை யுணர்த்தும் முப்பாற்  சொல்லானுஞ்  சொல்லப்படுவ
ரென்பது கொள்க.

(எ - டு.) நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் எனவரும்.

முன்னின்ற சுட்டிய  வென்பது  செய்யிய   என்னும்  வினையெச்சம்.
அதற்கு  வினை  ‘திரிந்த’  என்னும் பெயரெச்சம்,  பின்னின்ற  சுட்டிய
வென்பது செய்த என்னும் பெயரெச்சம்.

உயர்திணை மருங்கின்  பெண்மை  சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்
நிலைக்   கிளவியும்   என   மொழிமாற்றாகக்   கொள்க.  உயர்திணை
மருங்கின்  என்னும்  ஏழாவதற்குப்   பெயர்நிலைக்கிளவி   என்பதனை
முடிவாக்கி,    இடைநின்ற   சொல்லைப்    பெயர்   நிலைக்கிளவிக்கு
அடையாக்கிப் பொருளு ரைத்துக் கொள்க.

இரண்டிடத்துப் பெயர்நிலைக்கிளவியுஞ்  சொல்லினாற்  பொருளறியப்
படுதலின்  பேடியுந்  தெய்வமு  மென்னும்   பொருட்கு  ஆகுபெயராய்
நின்றவென வுணர்க தெய்வமென்றது தெய்வத்தன்மையை.

இதனாற் சொல்லியது;  முன்  சொல்லிநின்று  பொருள்வரையறையுள்
அடங்காது  நின்ற  பொருளினையும்   ஒருவாற்றான்  அடங்கக்  கூறிய
வாறாயிற்று.

எனவே  உயர்   திணைப்பொருள்,   பொருள்முகத்தான்  மக்களுந்
தேவரும் நகரருமென மூன்று  கூறுபடும்.  சொல்முகத்தான்  மக்களென்ற
தன்மேற்பட்டு  ஒன்றேயாம்.  உயர்திணைப்பாலாயிற்  பொருள்முகத்தால்
ஆண்பால்,  பெண்பால், ஆணலி, பெண்ணலி,  பேடிப்பால்,  ஆண்பாற்
பன்மை,   பெண்பாற்   பன்மை,   ஆணலிப்   பன்மை,  பெண்ணலிப்
பன்மை,  பேடிப் பன்மை, ஆண்பாலோடு  பெண்பால்  கூடிய  பன்மை,
பெண்   பாலோடு   ஆண்பால்  கூடிய  பன்மை,  ஆண்பாற்   சிலர்,
பெண்பாற்   சிலர்   என   விகற்பித்து    நோக்கப்   பலவகைப்படும்.
இப்பலவகையுஞ் சொல் வகை  மூன்றல்லதின்மையின்  மூன்றே  யாயின.
இவ்வாற்றானே    தேவர்,    நரகர்     என்பனவற்றது    பாகுபாடும்
அறிந்துகொள்க.

இனி, அஃறினை   உயிருடையதூஉம்,   உயிரில்லதூஉமென  இரண்
டாய்  அவற்றுள்  உயிருடையது   ஆணும்  பெண்ணும், ஆண் சிலவும்
பெண் சிலவும், ஆண் பன்மையும்,  பெண்  பன்மையும்,  அவ்விரண்டுந்
தொக்க  சிலவும்,  அவ்விரண்டுந்  தொக்க பலவும், உயிரல்லவற்றது ஒரு
மையும்  சிலவும்  பலவும்  என இவ்வாற்றாற் பல  பகுதிப்  படுமேனுஞ்
சொல்வகை   நோக்க  இரண்டல்லது   இன்மையின்   இரண்டேயாயின
என்பது. இனி மக்கண் முதலியவற்றின் வேறுபாடும் அறிந்துகொள்க.
(4)

******************************************************************