பெயர்ச்சொற்கள் காலங்காட்டா வெனல்
  

71.

பெயர் நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில் நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே.
 

என்- எனின்,  இதுவும்  பெயர்க்கு  ஓர்  இலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) பெயராகிய நிலைமையுடைய  சொற்கள் காலந் தோன்றா;
யாண்டுமோ  எனின், அன்று. காலந் தோன்றுதற்குப்  பொருந்தும் ஒரு
கூற்றுத் தொழிற் பெயரல்லாத விடத்து என்றவாறு.

என்றது  பெயர்தாம் பெயர்ப்பெயரும், தொழிற் பெயரும் என இரு
வகைப்படும்.  பெயர்ப்  பெயராவன  சாத்தன்,  கொற்றன்  என ஒரு
தொழிலாற் பெயரன்றி அவ்வப்பொருட்கு இடுகுறியாய் வருவன. இவை
காலம் தோன்றா.

தொழிற்பெயராயின் தோன்றும்.  தொழிற்பெயர்தாமும்  தொழிலின்
மேல் நின்ற  தொழிற்பெயரும், பொருள்மேல்  நின்ற தொழிற்பெயரும்
என   இருவகைப்படும்.   அவற்றுள்   தொழிலின்மேல்  நின்றனவும்
காலந்  தோன்றா;  அவை  உணல்,  தின்றல் எனப் பொருளது புடை
பெயர்ச்சியை  அறிவித்து நிற்கும் என்பது. இவற்றுள் பூசை, வேட்டை
என்றாற்போல்வன  வினைச்சொற்கு  அடியாய்ப்  புடை பெயர்ச்சியை
விளக்காது பெயர்ப் பெயரேபோல் நிற்பனவும் உள என்பது.

இனிப்     பொருண்மேல் நின்றனவும், வினைமுதற் பொருண்மேல்
நிற்பனவும் செயப்படுபொருண்மேல் நிற்பனவும் என  இருவகைப்படும்.
அவ்விருவகையும்  காலந்தோன்றி  நிற்கும்  என்றவாறு. அவைதாமும்
ஓசை   வேற்றுமையான்  ஒருவழி  வினை  எனப்பட்டு   நிற்பனவும்,
வினையாகாது பெயரேயாய் நிற்பனவும் என இருவகைப்படும்.

(எ - டு.) உண்டான்,   தின்றான்,    உண்டது,   தின்றது  எனப்
படுத்தலோசையான்  வினையெனப்பட்டுக்  காலந்  தோன்றி  நின்றன.
உண்டவன்,     தின்றவன்,     உண்ணுமது     என்பன     ஓசை
வேற்றுமையானன்றித் தானே பெயராய்க் காலங்காட்டி நின்றன. இவை
வினைமுதற்கண் பாகுபாடு.

1‘‘கொலைவர் கொடுமரந் தேய்த்தார்” “அவன் ஏறிற்று இக்குதிரை”
என்றாற்   போல்வன  வினைப்பெயரே.  அச்செயப்படுபொருட்  கண்
காலங்   காட்டி  நின்றன.  யான்  சொன்னவன், 
 2‘உண்பவை  நாழி
உடுப்பவை  இரண்டு’  என்றாற்  போல்வன தாமே செயப்படுபொருண்
மேற்  பெயராய்க்  காலந்தோன்றி  நின்றன. இவை செயப்படுபொருட்
பாகுபாடு.

நிலமும் காலமும் கருவியும் பற்றிவரும் தொழிற் பெயர் விகற்பமுங்
கொள்க.

(எ - டு.)  ...  ...  உண்டது    என்பது  இத்தொழிற் பெயர்களின்
காலவிகற்பம் என அறிக.

பெயர்ப்பெயர் காலந்தோன்றா என்பதற்கு விதி யாதோ எனின் இச்
சூத்திரத்தான் எய்தவும் பெறும் என்பது.                      (9)


கலி 12 : 1-2  புறம் 189 : 5

******************************************************************