என் - எனின், எழுவாய் வேற்றுமை அதிகாரம் உணர்த்தினார் ; இனி அம் முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டாம் எண்ணுமுறைக்கண்ணதாகிய ஐ என்னும் பெயரையுடைய வேற்றுமைச்சொல் யாதானும் ஓரிடத்துவரினும் வினையும் வினைக்குறிப்பும் என்று சொல்லப்படுகின்ற இரண்டும் அடியாக வரும். பொருள்பற்றிச் சொல்லின் காப்பு என்பது முதலாய்ச் சிதைப்பு ஈறாய் ஓதப்பட்ட இவையும், இவை போல்வன பிறவுமாகிய அவ்வவ்வினை வினைக்குறிப்பு என்னாநின்ற முதற்பொருளைப்பற்றி வருகின்ற எல்லாச் சொற்களும் இரண்டாவ தன் கூற்றன என்று சொல்லுவர் புலவர், (எ - று.) (எ - டு.) மரத்தைக் குறைத்தான் என்பது வினை. குழையையுடையன் என்பது வினைக்குறிப்பு. காப்பு - ஊரைக்காக்கும். ஒப்பு - தாயை யொக்கும். ஊர்தி - யானையை ஊரும். இழை - எயிலை யிழைக்கும். ஓப்பு - கிளியை யோப்பும்; இவை வினை புகழ் - ஊரைப் புகழும். பழி - நாட்டைப் பழிக்கும். பெறல் - ஊரைப் பெறும். இழவு - ஊரை இழக்கும். காதல் - மனைவியைக் காதலிக்கும்; வெகுளி - படையை வெகுளும். செறல் - செற்றாரைச் சேறும். உவத்தல் - தாயை யுவக்கும்; இவை வினைக்குறிப்பு. கற்பு - நூலைக் கற்கும். அறுத்தல் - ஞாணை அறுக்கும். குறைத்தல் - மரத்தைக் குறைக்கும். தொகுத்தல் - நெல்லைத் தொகுக்கும். பிரித்தல் - வேலியைப் பிரிக்கும். நிறுத்தல் - பொன்னை நிறுக்கும். அளவு - அரியை அளக்கும். எண் - அடைக்காயை எண்ணும். ஆக்கல் - அறத்தை யாக்கும். சார்தல் - வாய்க்காலைச் சாரும். செலவு - நெறியைச் செல்லும். கன்றல் - சூதினைக் கன்றும். நோக்கல் - சேயை நோக்கும். அஞ்சல் - கள்ளரை அஞ்சும். சிதைப்பு - நாட்டைச் சிதைக்கும் எனவும் வரும். அன்ன பிறவும் என்றதனால் விரலை முடக்கும், நாவினை வணக்கும் என்றற்றொடக்கத்து வினையும், அறவினையுடையன், ஊரை இன்புறும் என்றற்றொடக்கத்து வினைக்குறிப்பும் கொள்க. பிறவும் அன்ன. காப்பின் என்பது முதலான இன்னெல்லாம் உருபும் அன்று, சாரியையும் அன்று, அசைநிலை எனக் கொள்க. இடைநின்ற என்றா என்பன எண்ணிடைச் சொற்களாம். மற்றைய வேற்றுமைபோல் இது படும் பொருண்மை உணர்த்தாது முடிபு உணர்த்தியது என்னை ; இம்முடிபு ஏனை வேற்றுமைக்கும் உளவாலெனின், ஈண்டு முடிபு அன்று உணர்த்தியது; வினை வினைக்குறிப்பின் மேலிட்டு அது படுஞ் செயப்படுபொருளினை உணர்த்திற்றாக உரைக்கப்படும். செயப்படுபொருண்மையாவது என்னையாவெனின் ஒருவன் செய்யும் தொழிலினைத் தானுறுதல் எனக் கொள்க. அத்தொழிலினை உறுவதிதுவேயோ அத்தொழில் செய்வானுங் கருவியுஞ் செய்கின்ற காலமும் இடனும் என இன்னோரன்னவும் அத் தொழிலுறு மாலோவெனின், அவை உறும் எனினும் பெரும்பான்மையும் இதன் கண்ணது என்பது கருத்து. வினை என்னாது வினைக்குறிப்பு என்றது என்னையோ எனின், மரங்குறைத்தான் என்புழிக் குறைக்கப்படுதல் என்பது போலாகாது, குழையையுடையவன் என்புழிக் குழையினுடைமைப்பாடு செயப்படுபொருளாய் விளங்கி நில்லாமையின் வேறு கூறினார் என்பது. அச் செயப்படு பொருள்தான், இல்லதொன்றாய் உண்டாக்கப்டுவதும், உள்ளதொன்றாய் உடல் வேறுபடுக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒரு தொழில் உறுவிக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒன்றனாலுறப்படுவதும் எனப் பலவகையாம். இல்லதொன்று உண்டாக்கல் - எயிலையிழைத்தான் என்பது. உள்ளதொன்றனை உடல் வேறாக்கல் - மரத்தைக் குறைத்தான் என்பது. உள்ள தொன்று ஓர் தொழிலுறுவித்தல் - கிளியை யோப்பும் என்பது. உள்ளதொன்றனை யொன்றுறுதல்- நூல் நூற்றான் என்பது. பிறவும் அன்ன. இன்னும் இச் செயப்படுபொருள்தான் தன்கண்ணும் ஓர் தொழில் நிகழ்ந்து செயப்படுபொருளாவனவும், தன்கண் தொழில் நிகழாது செயப்படுபொருளாவனவும் என இருவகைய. தன்கண்ணும் தொழில் நிகழ்ந்தது - அறுத்தல், குறைத்தல் என்பனவாம்; அறுத்தல், குறைத்தல் மரமுதலாய தன் கண்ணும் நிகழ்ந்தன ஆதலின். தன் கண் நிகழாதது, வாய்க்காலைச் சாரும் என்றாற் போல்வன. பிறவும் அன்ன. இன்னும் இரண்டாவதன் செயப்படுபொருள் தெரிநிலைச் செயப்படு பொருளும், தெரியாநிலைச் செயப்படுபொருளும் என இருவகைத்தாம். தெரிநிலை மரத்தைக் குறைத்தான் என்பது. தெரியாநிலை சாத்தனால் மரம் குறைக்கப்பட்டது என்பது. மற்றிஃது எழுவாயன்றோ எனின், சொல்நிலை அன்னதாயினும் சாத்தன் என நின்ற உருபினை நோக்கப் பொருணிலை அன்னது அன்று என உணர்க. சோற்றை அட்டான் எனச் செய்வான் கருத்துள்வழிச் செயப்படு பொருளாதலும் சோற்றைக் குழைத்தான் எனக் கருத்தில்வழிச் செயப்படுபொருளாதலும் என இருவகைய. இனிச் செய்வானும் செயப்படு பொருளும் என்னும் இரண்டும் ஒன்றேயாயும் வரும். (எ - டு.)சாத்தன் தன்னைக் குத்தினான் எனவரும். இனிச் செயப்படுபொருட்கேதுவாயதூஉம் செயப்படுபொருளாய் வரும். அவை கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர் எனவரும். மற்றும்இதன் கருத்து விகற்பம் உரையிற்கொள்க. (10.11) |