அதற்குரிய பொருண்மை
 
   

75.

அதனின் இயறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனி னாதல்
அதனிற் கோடல் அதனொடு மயங்கல்
அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி
அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி
அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னான் ஏது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

 

என்  - எனின்,    மேல்   நிறுத்த    முறையானே    மூன்றாம்
வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மூன்றாமெண்ணுமுறைக்  கண்ணதாகிய  ஒடு  என்னும்
பெயரையுடைய    வேற்றுமைச்   சொல்  வினைமுதல்  கருவியாகிய
காரணங்களை    உடைத்து.    அஃது    வருமாற்றைச்   சொல்லின்
ஒன்றனாலொன்று   பண்ணப்படும்  பொருண்மை,  ஒன்றனாலொன்று
நகுதல்   என்னும்   பொருண்மை,  ஒன்றனாலொன்று  தொழிலுறுதல்
என்னும்    பொருண்மை,    ஒன்றனாலொன்று   ஆதல்   என்னும்
பொருண்மை,  ஒன்றனாலொன்றைக்  கோடல்  என்னும் பொருண்மை,
ஒன்றனோடொன்று      மயங்கல்      என்னும்      பொருண்மை,
ஒன்றனோடொன்றியைந்து  ஒருவினையாதல்  என்னும்  பொருண்மை,
ஒன்றனோடொன்றியைந்து  வேறுவினையாதல் என்னும்  பொருண்மை,
ஒன்றனோடொன்றியைந்து  ஒப்பல்லா வொப்பினையுரைத்தல் என்னும்
பொரு்ண்மை,     இத்தன்மையான்     என்னும்      பொருண்மை,
ஏதுப்பொருண்மை  என்னும்  இவையும், இப்பெற்றியானே இதனிடத்து
வருகின்ற  அத்தன்மையான  பிற  பொருள்களும்   அம்மூன்றாவதன்
கூற்றன என்று சொல்லுவர் புலவர் (எ - று.)

மூன்றாவதற்கு   உருபு ஒடுவும், ஆனும் என இருவகைத்து. ஆன்
என்பது  எடுத்தோதிற்றிலரெனினும் “அதனினியறல் அதற்றகு கிளவி”
என ஓதிய வாய்ப்பாட்டான் பெறுதும் என்பது.

வினைமுதல்     கருவி         என்றோதிய     பொருண்மை
இவ்விரண்டுருபிற்கும் ஒக்கும் என்பது.

(எ - டு.) வினைமுதல்  -  கொடியோடு துவக்குண்டான்.  நாயாற்
கோட்பட்டான்.

கருவி- ஊசியோடு  குயின்ற  தூசும்  பட்டும், வேலானெறிந்தான்
எனவரும்.

அதனினியறல் - தச்சன் செய்த சிறுமா வையம் என்பது.

அதற்றகு கிளவி - வாயாற்றக்கது வாய்ச்சி என்பது.

அதன் வினைப்படுதல் - நாயாற்கோட்பட்டான், சாத்தனான் முடியு
மிக்கருமம் என்பன.

அதனினாதல் - வாணிகத்தானாயினான் என்பது.

அதனிற் கோடல் - காணத்தாற்கொணட் அரிசி என்பது.

அதனொடு மயங்கல் - எண்ணொடுவிராய அரிசி என்பது.

அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி  -  சாத்தனான்  வந்தான்
என்பது.

அதனோடியைந்த வேறுவினைக் கிளவி - மலையொடு பொருதமால்
யானை  காவொடறக்குளந் தொட்டான் என்பன. வேறு வினை என்பது
ஒன்றன்கண்ணே வினையாதல்.

அதனோடியைந்த வொப்ப லொப்புரை - நூலொடு நார் இயைந்தது
போலும், முத்தொடு பவழம் கோத்தது போலும் என்பன.

இன்னான் என்பது, இத்தன்மையான்  என  ஒருவன் பெற்றி கூறல்;
அஃது கண்ணாற் கொத்தை, காலான் முடவன் என்பன.

ஏது - முயற்சியிற் பிறத்தலான் இசை நிலையாது என்பது.

அதனினியறல் முதலாக அதனிற்கோடல் ஈறாக ஓதிய பொருண்மை
எல்லாம்    சூத்திரத்துள்   ஆனுருபின்   சுவடுபட    ஓதினமையின்
பெரும்பான்மை     ஆனுருபிற்கே     உரியவாம்.      சிறுபான்மை
ஒடுவுருபிற்கும் வருவன உளவேல் கொள்க.

இவற்றுள்,     அதனினியறல், அதன்வினைப்படுதல்   என்றோதிய
இரண்டும்   வினைமுதற்   பாகுபாடு.  அதனிற்  கோடல்,  கருவியின்
பாகுபாடு  போலும்.  அதற்றகு  கிளவியும்  அதனினாதலும்  ஏதுவின்
பாகுபாடு.    அதனொடு    மயங்கல்   முதலாக   அதனோடியைந்த
ஒப்பலொப்புரை     ஈறாக     ஓதின     எல்லாம்,      ஒடுவுருபு
கொடுத்தோதினமையின்  பெரும்பான்மையும்  ஒடு  உருபிற்கே உரிய;
சிறுபான்மை ஆனுருபிற்கும் வருவன உள வேற்கொள்க.

இன்னான்     என்னும்   பொருண்மையும்,    ஏது    என்னும்
பொருண்மையும்  ஓருருபின் எடுத்தோதாமையின் வழக்கிற்கேற்றவாறு
கொள்ளப்படும்.

முன்னும்     ஏதுவின்   பாகுபாடோதிவைத்துப்   பின்னும்  ஏது
எனவோதியது  அவ்வாறொழிய  வருவனவற்றைக்  கருதிப்  போலும்.
அவ்வேது   காரக   ஏதுவும்   ஞாபக  ஏதுவும்  என  இருவகைத்து.
முயற்சியிற் பிறத்தல் காரகம்; பிறத்தலான் இசைநிலையாது

என்பது  ஞாபகம். அஞ்ஞாபகத்தைப் போலும் ஈண்டு ஏது   என
ஓதியது.

அன்ன     பிறவும்    என்றது    சூத்திரத்துள்   எடுத்தோதின
பாகுபாட்டினொழிந்தனவும்.   பிற   பொருட்பாகுபாடுகளும்   கருதிப்
போலும். அவையெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க.        (12,13)

******************************************************************