என் - எனின், நிறுத்த முறையானே நான்காம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)நான்காமெண்ணு முறைமைக் கண்ணதாகிய குவ்வென்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் யாதொரு பொருளினை ஏற்பதாக உணர்த்திநிற்கும்; இன்னும், அது தான் வரும் பொருட்பாகுபாட்டினைச் சொல்லின் ஒன்றற்கொன்று பயன்படுதலென்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று பொருள் மேற்கொடுப்பதாக உடம்படுதலென்னும் பொருண்மை, ஒன்றன் கொருபொருளுரிமையுள்வழிக் கூறிடப்படுதலென்னும் பொருண்மை, அம்முதற் பொருட்டாகலான் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று பொருத்தமுடைத்தாதல் என்னும் பொருண்மை, ஒருபொருளினை மேற்பெறுதல் காரணமாக ஒருதொழில் நிகழ்தலென்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று நட்பாதலும், பகையாதலும் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று காதலுடைத்தாதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று சிறத்தல் என்னும் பொருண்மை என்று சொல்லப்பட்ட அப்பொருண்மை மேல் வரும் சொற்களும், நான்காம் உருபின் கூற்றன என்று கூறுவர் புலவர், (எ - று.) எப்பொருளாயினும் என்றது, மூன்றிடத்துப் பொருள்களது பன்மை நோக்கி. சொற்கள் பொருள்களை உணர்த்துதல் உரிமை நோக்கிச் சொல் தன்மேல் வினைப்பட எப்பொருளாயினும் கொள்ளுமென்று கூறினாரெனினும் கோடலையுணர்த்தும் என்றவாறாகக் கொள்க. (எ- டு.) அதற்கு வினையுடைமை - சாத்தற்குச் சோறு கொடுத்தான், கரும்பிற்கு வேலி, மயிர்க்கு எண்ணெய் என்பன. அதற் குடம்படுதல் - சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் என்பது. அதற்குப் படுபொருள் - சாத்தற்குப் படுபொருள் கொற்றன் என்பது. அதுவாகு கிளவி - கடிசூத்திரத்துக்குப் பொன் என்பது. அதற்கு யாப்புடைமை - கைக்கு யாப்புடையது கடகம். கூழிற்குக் குற்றவேல் செய்யும் என அறிக. நட்பு - நட்பு உடையன், அவற்குத் தமன் என்பன. பகை - மக்கட்குப் பகை பாம்பு, அவற்குப் பகை மாற்றான் என்பன. காதல் - நட்டார்க்குக் காதலன், தாய்க்குக் காதலன் என்பன. சிறப்பு - வடுகரரசர்க்குச் சிறந்தோர் சோழிய அரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பது. அதற்கு வினையுடைமை முதலாகக் கூறப்பட்டன எல்லாம் முன் கூறிய கொடைப் பொருளின் பாகுபாடு அல்ல. பிறபொருளென அறிக. அவற்றுள், அதற்குடம்படுதல், அதற்கு படுபொருள் என்னும் இரண்டும் கொடைநீர்மையும் சிறிதுடைய. உம்மையால் பிறவும் அதன்பாலுள. பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு என்பனபோல வரும்; பிறவும் அன்ன. உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை யாகலான் இந்நிகரன கோடற்கு உடம்படாதா லெனின், இறந்தது தழீஇய அதனையே இரட்டுறமொழிதல் என்னும் ஞாபகத்தினான் எதிரது தழீஇயதூஉமாக்கிக் கூறப்பட்டது எனக் கொள்க. (14,15) |