என் - எனின் நிறுத்தமுறையானே மேற்கூறிய உயர்திணைச் சொல்லுள் ஆடூஉ அறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று, (இ - ள்) ஆடூஉ வறியுஞ் சொல்லாவது னகாரமாகிய ஒற்றினை யீறாகவுடைய சொல், (எ - று.) (எ - டு) உண்டான், உண்ணா நின்றான், உண்பான்: இவை தெரிநிலை வினை. கரியன், செய்யன் : இவை குறிப்புவினை. சூத்திரம் ‘னஃகா னொற்றே யாடூஉ வறிசொல்’ எனப் பொதுப்பட நின்றமையின் புதன், குபேரன், உண்டேன், உண்மின் என்பனவும் ஆண்பா லுணர்த்துதற்குச் சென்றவேனும், பொதுமைவிலக்கி மேற் சொல்லுகின்ற விதிகளாற் படர்க்கை யிடத்து முற்றுச் சொற்கீறாயல்லது வாராதெனக் கொள்க. இது மேற்கூறுவனவற்றிற்கும் ஒக்கும். உண்டான் என்புழி நான்கெழுத்துக்கூடி ஆண்பாலுணர்த்திற்றே யாயினும், பிறவெழுத்துக்கள் பிறபாலுணர்த்தும் வழியும் வருதலான் னகர ஒற்றையே தலைமைபற்றி ஆடூஉ அறிசொல் என்றார். (5) |