அதற்குரிய உருபுகள்
 

83.

கண்கால் புறமகம் உள்உழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்இடை கடைதலை வலமிடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.
 

என் -  எனின், நிறுத்த  முறையானே ஏழாம்  வேற்றுமையாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஏழாம்  எண்ணுமுறைக்  கண்ணதாகிய  கண் என்னும்
பெயரையுடைய  வேற்றுமைச்  சொல்வினை  செய்யிடமும்,   நிலமும்,
காலமுமாகிய  மூன்று  பொருட்கண்ணும்  வரும். அதன் உருபு வரும்
பாகுபாட்டைச்  சொல்லின்  கண்  என்னும்  உருபு  முதலாய்ப் புடை
என்னும்  உருபு  ஈறாக  ஓதப்பட்ட உருபுகளும், இடையே தே, வகை
என ஓதிய திசைக்கூற்றுப் பொருண்மையும், பின்னரும் முன்  என்னும்
உருபு   முதலாக  இடம்  என்னும்  உருபு  ஈறாக  எடுத்தோதப்பட்ட
உருபுகளும் அத்தன்மைய பிற உருபுகளும் அவ்வேழாவதன்  கூற்றன,
(எ - று.)

வினைசெய்யிடம்  - வினைசெய்யா நிற்றலாகிய இடம். வினைசெய்
நிலம்  - ஒரு தொழில் நிகழாது வரையறையுடையதோர் இடம். காலம்
என்பது  ஒரு  தொழில் நிகழ்தற்கு இடமாய் வரையறைப்பட்டு நிற்பது.
இம்  மூன்றன்  கண்ணும்  ஏழாவது வருமிடத்து இடமும் இடத்துநிகழ்
பொருளும் வேறுபட வருவனவும் என இருவகைய.

(எ - டு.) வினைசெய்யிடம்    -     தட்டுப்புடையுள்  வந்தான்,
தட்டுப்புடையுள் வலியுண்டு.

நிலம் - குன்றத்துக் கூகை, குன்றத்துக்கண் குவடு, ஆகாயத்துக்கண்
பருந்த.

காலம்  - மாரிக்கண் வந்தான், மாரிக்கண் நாள் என வரும்.

கண் - ஊர்க்கண் இருந்தான்.

கால்  - ஊர்க்கால் இருந்தான்.

அகம் - மாடத்தகத்து இருந்தான்.

உள் - ஊருள் இருந்தான்.

உழை  - சான்றோருழைச் சென்றான்.

கீழ் - மாடத்துக் கீழ் இருந்தான்.

மேல்  - மாடத்து மேல் இருந்தான்.

பின் - ஏர்ப்பின் சென்றான்.

சார்  - காட்டுச்சார் ஓடுங் களிறு.

அயல்  - ஊரயல் இருந்தான்.

புடை - ஊர்ப்புடை இருந்தான்.

இவையெல்லாம் உருபு.

தே, வகை என்பன திசைக்கூறு. இது பொருள்.

திசை    என்பது ஆகாயம்போல் வரையறைப்படாது சொல்லுவான்
குறிப்பினவாய்    நிற்றலின்   வேறு   பொருளென்று,   நிலமென்புழி
அடக்காது,  கொண்டுபோந்து  கூறினார்போலும். வடக்கண் வேங்கடம்,
தென்கட்குமரி எனவரும்.

முன்  - தேர் முன் சென்றான்.

இடை - சான்றோரிடை இருந்தான்.

கடை - கோயிற்கடைச் சென்றான்.

தலை - தந்தைதலைச் சென்றான்.

வலம் - கைவலத் துள்ளது கொடுக்கும்.

இடம்  - கையிடத்துப்பொருள் என வரும்.

பிறவும் என்றதனால், கிழவோள்தே எத்து,  கிழவி மாட்டு என்றாற்
போல்வன கொள்க.

ஏனை     வேற்றுமைபோலப்  பொருட்பாகுபாடு அன்றி உருபின்
பாகுபாடு  உண்மையின்  அதனை  விரித்தோதினார்  எனக் கொள்க.
ஓதின  உருபுகளெல்லாவற்றினும்  கண்  எனும்  உருபு சிறந்தமையின்
முன்வைத்தது என்பது.

மற்றும் புறம், அகம் என்பனபோல்வன எல்லாம் பெயராய், ஆறாவ
தன்  பொருண்மையாய்  வருகின்றமையின் ஏழனுருபு ஆமாறு என்னை
யெனின்,     அகம்   புறம்   என்பன   ஓரிடத்தினை  வரையறுத்து
உணர்த்தும்  வழி  ஆறாவதாம்;  அவ்வாறன்றிக் கண் என்பது போல
இடம்  என முழுதுணர்வு செல்லநின்றவழி  ஏழாவதாம் எனக் கொள்க.
இதுநோக்கிப்   போலும்   கண்   கால்   எனக்   கண்  என்பதனை
இருகாலாவது கூறியது என்பது.

இவ்வாறன்றிக்   கண் என்பது ஓரிடத்தினை வரையறாது முழுவதும்
உணரநிற்கும்    உருபு    எனவும்,    அல்லது   ஓரிடப்   பொருள்
உணர்த்திநிற்கும் உருபு எனவும் கூறுவதோர் நயமுண்டுபோலும். (20,21)

******************************************************************