என் - எனின், இதுவும் அவ்விரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) சினையாகிய நிலைமையையுடைய பொருண்மைக்கு இரண்டாவதும் ஏழாவதும் அதன் வினைக்கூறு நிலைமைக்கண் ஒத்த பொருள் என்று கூறுவர் புலவர், (எ - று.) (எ - டு.)கண்ணைக்குத்தினான், கண்ணின் குத்தினான் என வரும். சினைக்கண் இவ்விரண்டும் வரும் என்றது என்னை, பிறவும் வருமால் எனின், முன் இடப்பொருட்கண்வரும் என்ற ஏழாவது, மற்றொரு வேற்றுமையோடு தொடர்ந்து கூறும்வழிச் செயப்படுபொருட்கண் வருதலும் கண்டு அது கூறியவாறு எனக் கொள்க. தொடர்ந்து கூறும் வழியாமாறு உணரச் சொல்லுகின்றார். வினைநிலை என்றது இரண்டாவதற்கு ஓதிய வினை, வினைக்குறிப்பு என உணர்க. (2) |