என் - எனின், இதற்கும் அக்கருத்து ஓக்கும். (இ - ள்.) முதற்கண்ணே இரண்டாம் வேற்றுமை வரின் ஏழாம் வேற்றுமை சினைக்கண்ணே வருதல் விளங்கிற்று என்று சொல்லுவர் புலவர், (எ - று.) (எ - டு.) யானைக் கோட்டின்கண் குறைத்தான், சாத்தனைக் கண்ணின்கண் குத்தினான் எனவரும். தெள்ளிது என்றதனால் சிறுபான்மை இரண்டாவது தானேயும் வரப்பெறும். அஃது யானையைக் கோட்டைக் குறைத்தான், சாத்தனைக் கண்ணைக் குத்தினான் எனக் கொள்க. இவற்றுள் முதல் சினைப் பொருட்குக் கண்ணுருபினைத் தொடர்ந்து கூறும்வழி இரண்டாவதனோடு ஒப்பச் செய்யப்படுபொருட்கண் ஏழாவது வந்தவாறு கண்டு கொள்க. மணியது நிறத்தைக் கெடுத்தான், மணியை நிறத்தைக் கெடுத்தான்; இது பண்பு, தலைமகனது செலவை அழுங்குவித்தல், தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல், தலைமகனைச் செலவை அழுங்குவித்தல். இது தொழில். பிறவும் அன்ன. இவ்வாறு மூன்று மூன்றுருபு வாராது, ஒரு பொருளது இரண்டாவதன் தொடர்ச்சிபற்றி இரண்டாவத தானே வருவனவும் கொள்க. (எ - டு.) சாத்தனை நூலை ஓதுவித்தல். யாற்றை நீரை விலக்கினான் என்பனபோல்வன. பிறவும் அன்ன. (5) |