என் - எனின், மேலதன் முடிபு முடிதலுடையது பிறிதும் உண்டென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) திரட்சி என்னும் பொருளினை யுணர நின்ற பெயர்களும் மேற்கூறிய சினைமுதல்களது இயல்பின. அவை கோடற்குக் காரணம் என்னை எனின் முற்காலத்து நடந்த கூற்றேதுவாகப் பிற்காலத்து நடந்து மருவின முறைமையுடையன அவையாகலான், (எ - று.) ஆயியல் திரியா என்றது மேல், சினைமுதலாய் முதல்சினையாய் வந்தவாறு போலப் பிண்டமே பொருளாய் அப்பொருளே பிண்டமாய் வருமென்றவாறு, அன்றி, பொருணிலைமை சால்லுவான் குறிப்பினவாறாயின் அவ்வாறு போலப் பொருளின் வேறு பிண்டம் என்பதொன்றுளதாகல், அச்சொல்லுவான் குறிப்பின் பாலது என்றவாறு. (எ - டு.) அப்பிண்டந்தான் ஒன்று பல குழீஇயதும் வேறு பல குழீஇயதும் ஆம். ஒன்றுபல குழீஇயது எள்குப்பை. எள்ளின் வேறு குப்பை என்று உண்மை வகையின் இல்லை யென்றவாறு. வேறு பல குழீஇயது படைக்குழாம். முதல் சினை எனவும், பொருள் பிண்டம் எனவும், இவை யாராய நின்றமையின் மற்றொன்று விரித்தல் என்னுங் குற்றமாம், பிறவெனின், அதற்கோர் அதிகாரப்பட்டு நின்றதாகலானும் பொருள் ஆராய்ச்சியும் இச் சொல்லாராய்ச்சிக்குப் பயன் படும் நிலைமைத்தாகலானும் அமையும் என்பது. (7) |