ஒடு உருபு உயர் பொருளுணர்த்தும் பெயர்வழி
வரும் எனல்
 

93.

ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே.
 

என் - எனின்,  மூன்றாம்   வேற்றுமைப்  பொருட்  கண்ணதோர்
சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்.) ஒருவினை கொண்டு முடிதலுடைய ஒடு என்னும்  சொல்
அவ்   வொருவினையையுடைய   இரு  பொருளினுமாய்   அதன்பின்
வருமோ  எனின்,  அது  கூறுவான்  அப்  பொருளின்  அப்பொழுது
உயர்ந்ததாகக் கருதியதன் பின் வரும்,(எ - று.)

(எ - டு.) அரசரொடு  வந்தார் சேவகர்  என்பதைச் சேவகரொடு
வந்தார் அரசர் என்னற்க.

இனி அவ்வுயர்புதாம் குலத்தான் உயர்தலும், தவத்தான் உயர்தலும்,
நிலைமையான்    உயர்தலும்,   உபகாரத்தான்   உயர்தலும்   எனப்
பலவகைய.

இழிந்தவழி     ஒடுவைத்துச் சொல்லுவது அந்நேரத்து அவற்றாய
தொழின்மைச்  சிறப்பு  நோக்கி என உணர்க. அவை, நம்பி நாயொடு
வந்தான் என்றாற் போல்வன்.
                              (8)

******************************************************************