இரண்டாவதன் பொருளில் மூன்றும் ஐந்தும்
வந்து மயங்கல்
 

95.

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ்
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்.

 

என் - எனின், இரண்டாவது மூன்றாவதனோடும், ஐந்தாவதனோடும்
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இரண்டாம்       வேற்றுமையிடத்து,      பெற்றியான்
நோக்கப்படுதலன்றி   மனத்தான்   நோக்கப்படும்   நோக்கும்   என
மூன்றாவதன்கண்ணும்,    ஐந்தாவதன்    கண்ணும்    ஒத்தகிழமைய
வென்றோதிய ஏதுப்பொருள்படும். (எ - று.)

(எ - டு.) வானோக்கி  வாழும்   என்பது, வானைநோக்கி வாழும்,
வானானாய  பயன் நோக்கி வாழும், வானினாய பயன் நோக்கி வாழும்
எனவரும்.   ஏதுவுமாகும்   என்ற   உம்மையான்  தன்பொருட்பாடே
சிறந்தது.

இனி     ஏதுவாம்வழிச் செயப்படுபொருள்படுதற்கு உரிய நோக்கி
என்பதனை  ஒழிய,  வானை  வாழும் என்றாற்போல நிற்க வேண்டும்
எனின்,  செயப்படு   பொருள்   ஒழிய.  ஏதுப்பொருட்  குறிப்போடு
செயப்படு பொருளாய் நிற்கும் என்பது போலும் கருத்து.
        (10)

******************************************************************