என் - எனின், ஆறாவது நான்காவதனோடும் மயங்குமாறு உணர்ந்துதல் நுதலிற்று. (இ - ள்.) அது என்னும் வாய்பாட்டையுடைய ஆறாம் வேற்றுமை, உயர்திணைத் தொகைவயின் அது என்னும் வாய்பாடு கெட நான்காவதாய் வரும், (எ - று.) (எ - டு.) நம்பி மகன், நம்பிக்கு மகன் என்பது இலக்கண மில்வழி மயங்கல், நம்பியது மகன் என்பது இன்மையினென்க. இச்சூத்திரத்தானே இவ் வுருபோடொத்துத் தம் பொருள்பட நில்லாது பெயர்போல் ஆறாவது பால் தோன்றி நிற்கும் என்பது பெற்றாம். இந் நயத்தானே வினைக்குறிப்பு உரிமைப்படா நிற்கும் வழியுண்டேனும் கொள்க. (11)
1. இந் நூற்பாவினைத் தெய்வச்சிலையார் 102 ஆம் நூற்பாவை அடுத்து வைத்துள்ளார். |