இதன் பொருள்: அவற்றுள் - நிலைமொழி வருமொழியென்றவற்றுள், நிறுத்தசொல்லின் ஈறாகுஎழுத்தோடு குறித்து வரு கிளவி முதலெழுத்து இயைய - முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லினது ஈறாகின்ற எழுத்தோடே அதனை முடிக்கக் கருதி வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரைப் புணர்க்குங்காலும் - பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், பெயரொடு தொழிலைப் புணர்க்குங்காலும் - பெயர்ச் சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு பெயரைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லோடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங்காலும் - தொழிற் சொல்லோடு தொழிற் சொல்லைக் கூட்டும் இடத்தும், மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அந்நான்கே - திரியும் இடம் மூன்று இயல்பு ஒன்று என்று முந்தைநூலிற் கூறிய அந் நான்கு இலக்கணமுமே, மொழி புணர் இயல்பு - ஈண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம் என்றவாறு. |