முற்றும்மை தொகுத்து ஈற்றசையேகாரம் விரித்தார். |
உதாரணம் : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என வரும். ஒளகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வாராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி. கா தீ பூ சே தை கோ கௌ என வரும். 1இவை தம்மையுணரநின்ற வழி எழுத்தாம். இடைநின்று பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத்தேறிய மெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு நெடுமையுங் குறுமையும் இன்மை உணர்க. |
(10) |
44. | குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. |
|
இது குற்றெழுத்து ஐந்தும் மொழியாகா ; அவற்றுட் சில மொழியாகுமென்பது உணர்த்துகின்றது. |
இதன் பொருள் : குற்றெழுத்து ஐந்தும் - குற்றெழுத்தாகிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே - தாமே நிறைந்துநின்று மொழியாதல் இல; சில மெய்யோடு கூடி நிறைந்துநின்று மொழியம் என்றவாறு. |
உதாரணம் : து நொ எனவரும். இவை உயிர்மெய்க்கண்ணல்லது வாராமையானும், உயிர்க்கண்ணும், ஏனை அகரமும் எகரமும், அக்கொற்றன் எப்பொருள் எனத் தனித்து நின்று உணர்த்தலாற்றாது இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்துநின்று சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்துதலானும் 'நிறைபில' வென்றார். 2முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு நின்றதென்று உணர்க. |
(11) |
|
1. இவை என்றது, நெட்டெழுத்துக்களை, தம்மை என்றது, எழுத்தாகிய தம்மை என்றபடி. தம்மை - தம்மியல்பை. இடைநிற்றல் - தன்னையுணர்த்தி எழுத்தாதற்கும் பொருளையுணர்த்திச் சொல்லாதற்கும் இடையாக நிற்றல். எனவே, எழுத்துக்கள் சொல்லாயவிடத்துந் தம்மையுணர்த்தி எழுத்தாதலுமுடைய வென்பதாம். |
2. முற்றும்மை என்றது, ஐந்தும் என்றதிலுள்ள உம்மையை. அது எச்சப்பட்டு நின்றதென்றது, சிலமொழியாம் என்னும் பொருள் பயந்து நின்றமையை. எல்லாரும் வந்திலர் என்புழிச் சிலர் வந்தார் எனப் பொருள்படுதல்போல. [சொல் - இடை - சூ- 37.] |