சூ. 10 :மெய்யொ டியையினும் உயிரியல் திரியா 
(10)
 

க - து:

உயிரெழுத்துக்கட்காவதோ ரியல்பு கூறுகின்றது.
 

பொருள்:பன்னீருயிரும் மெய்யெழுத்தொடு   இயையும் -  இணைந்து
(உயிர்மெய்யாய்)    இசைப்பினும்   தாம்   தம்மியல்பினின்று   திரியா.
 

மெய்யொடு   இயைதலாவது;   வாய் உறுப்புக்களான் வடிவுற்று நிற்கும்
மெய்கள்   இசைப்பதற்குத்  துணையாதல்.   அது ‘‘புள்ளி யில்லா எல்லா
மெய்யும்’’   என்னும்    சூத்திரத்துக்   கூறப்படும்.   உயிரியல்  என்றது
மாத்திரையையும்   குறில்   நெடில்   என்னும்   பெயரையும் அளபெழும்
தன்மையையுமாம்.
 

தனித்தியங்கும்   உயிரும்   மெய்யினை   இசைக்கும்  உயிரும் வேறு
வேறென்பார்   நச்சினார்க்கினியர்.   அவர்தம்  நுண்ணறிவு   பாராட்டற்
குரியதெனினும் அஃது இலக்கண மரபன்றாம்.
 

மெய்யொடு    இயையினும்   என்னும்  உம்மையை இழிவு சிறப்பாக்கி
அதனான்   வலி,   மெலி,   இடை   என்னும்   மெய்யின் தன்மைகளை
உயிர்மெய்க்குங் கூட்டிக்கூறுதலைக் கொள்க.
 

உயிரியல்   திரியா   எனவே மெய் இயல்திரியும் என்பது பெறப்படும்.
அது   ‘‘புள்ளி   யில்லா   எல்லா   மெய்யும்’’   என்னும்  சூத்திரத்தாற்
பெறப்படும்.   மேலும்   இதனான்   குறில்   நெடில்   என்னும் உயிரின்
தன்மைகளை   உயிர்மெய்க்குக்   கூட்டிக்   கூறுதலும்   கொள்க.
 

இதனான்   தனித்தியங்குமிடத்து ஓரியல்பும் மெய்யொடு இயையுமிடத்து
ஓரியல்புமாக   உயிரின்   தன்மை   வேறுபடுமென்பதனை   உய்த்துணர
வைத்தார்.     மேலும்,     மெய்யெழுத்துக்களின்   நிலை    மூன்றனுள்
உயிர்மெய்யின் நிலை இதுவென்பதும் இதனாற் புலப்படுத்தினார்.