சூ. 101 :சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்

தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்

தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி

ஒத்த காட்சியிற் றம்மியல்பு இயலும்
(19)
 

க-து:

சார்பெழுத்துக்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:   சார்ந்துவரினல்லது தமக்கியல்   பிலவெனத்     தேர்ந்து
வெளிப்படுத்த ஏனை மூன்றும்=இடமும் பற்றுக் கோடுமாகத்  தத்தமக்கேற்ற
தலைமை   எழுத்துக்களைச்   சார்ந்து  ஒருமொழிக்கண்  எழுத்தொலியாக
வருதலன்றித் தாமாகத் தனித்துவரும் இயல்பில்லாதன என ஆராய்ந்தறிந்து
கூறப்பெற்ற  சார்பெழுத்துக்கள்  மூன்றும்,   தத்தம்  சார்பிற்  பிறப்பொடு
சிவணி=தாம்   சார்ந்து  தோன்றும்  தலைமை  எழுத்துக்களின்  வளியிசை
வினைக்களமுயற்சிப்   பிறப்பியல்களொடு  ஒருங்கொத்து,  ஒத்தகாட்சியின்
தம்மியல்பு  இயலும்  =  தத்தம் இயல்பொடு கூடி அவ்இரண்டு தன்மையும்
ஒத்த தோற்றத்தொடு உருவாகிப் பிறக்கும்.
 

காட்சி=வடிவத்தோற்றம். ஏனை மூன்றும் சிவணி ஒத்தகாட்சியின் இயலும்
என வினைமுடிபு செய்க.
 

அவை பிறந்து வருமாறு: ‘‘மியா’’ என்பதன்கண்  நிற்கும் குற்றியலிகரம்
மகரத்தின் பிறப்பிடமாகிய இயைந்த இதழையும்  யகரத்தின் பிறப்பிடமாகிய
அடிநா அண்ணத்தையும் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
 

‘நாகரிது’  என்னும் சொற்களுள்  நிற்கும்  குற்றியலுகரம்  தனது பற்றுக்
கோடாகிய  ககரமெய்    பிறக்குமிடத்தையும்   சார்பாகிய   ஆகாரத்தின்
பிறப்பிடத்தையும் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
 

‘அஃது’  என்னும்   சொற்கண்   நிற்கும்    ஆய்தம்   அகரத்திற்கும்
தகரமெய்க்கும் உரிய அண்ணம் பல் நா ஆகிய உறுப்புக்களின் தொழிலான்
அவற்றைச் சார்ந்து தனது இயல்பு தோன்றப் பிறக்கும்.
 

ஏனைய   சொற்களின்    கண்ணும்    சார்பும்    பற்றுக்கோடுமாகிய எழுத்துக்களின்   பிறப்புவழி   இவை   தோன்றிவருமாறு      சொல்லிக்
கண்டுகொள்க.